Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 60)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

“ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய” – இதற்கான ஆறு பொருள்களின் சுருக்கம்

மூலம் – “அதோ அசக்த அதிகாரத்வம் ஆகிஞ்சந்ய ப்ரஸ்க்ரியா | அநங்கபாவோ தர்மாணாம் அசக்ய ஆரம்ப வாரணம்”, “தத் ப்ரத்யாசா ப்ரசமநம் ப்ரஹ்மாஸ்த்ர ந்யாய ஸூசநம் | ஸர்வதர்ம பரித்யாக சப்தார்த்தா: ஸாது ஸம்மதா:”, “தேவதாந்தர தர்மாதி த்யாக உக்தி: அவிரோதிநீ | உபாஸகே அபி துல்யத்வாத் இஹ ஸா ந விசேஷிகா”. “உபாயாபாய ஸந்த்யாகீ” இத்யாதிகளிற் சொன்ன உபாய த்யாகமும் இப் ப்ரகாரங்களிலே நிர்வாஹ்யம். (1) மூண்டாலும் அரியதனில் முயல வேண்டா முன்னமதில் ஆசைதனை விடுகை திண்மை வேண்டாது சரணநெறி வேறோர் கூட்டு வேண்டில் அயனத்திரம்போல் வெள்கி நிற்கும் (2) நீண்டாகு நிறைமதியோர் நெறியில் கூடா நின் தனிமை துணையாக என்றன் பாதம் பூண்டால் உன் பிழைகளெல்லாம் பொறுப்பனென்ற புண்ணியனார் புகழனைத்தும் புகழுவோமே

அதோ அசக்த அதிகாரத்வம் ஆகிஞ்சந்ய ப்ரஸ்க்ரியா அநங்கபாவோ தர்மாணாம் அசக்ய ஆரம்ப வாரணம் – ஆகவே சக்தியில்லாதவனுக்கு மட்டுமே அதிகாரம் என்னும் தன்மை, தன்னிடம் வேறு கைம்முதல் இல்லை என்பதை எண்ணியபடி இருத்தலை முன்னிறுத்துதல், வர்ணாச்ரம தர்மங்கள் அங்கமாக இல்லாத தன்மை, செய்ய இயலாதவற்றை செய்ய முனைவதைத் தடுத்தல்; தத் ப்ரத்யாசா ப்ரசமநம் ப்ரஹ்மாஸ்த்ர ந்யாய ஸூசநம் ஸர்வதர்ம பரித்யாக சப்தார்த்தா: ஸாது ஸம்மதா: - அதனைக் குறித்த ஆசையைக் கைவிடல், ப்ரஹ்மாஸ்த்ரம் போன்று வேறு எதனையும் பொறுக்காமல் உள்ளதைக் கூறுதல் ஆகியவையே “ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய” என்பதன் பொருளாக ஸாதுக்களால் ஏற்கப்படுகிறது. தேவதாந்தர தர்மாதி த்யாக உக்தி: அவிரோதிநீ உபாஸகே அபி துல்யத்வாத் இஹ ஸா ந விசேஷிகா – மற்ற தேவதைகளைக் குறித்த தர்மங்கள் முதலானவற்றைக் கைவிடுவதைப் பொருளாக உரைத்தல் என்பது ப்ரபந்நர்கள் விஷயத்தில் முரண்பாடு ஆகாது; ஆனால், பக்தியோகத்தில் நிற்பவன் விஷயத்தில் அவற்றைக் கைவிடுதல் ஒத்துப் போவதால், ப்ரபந்நனை மட்டுமே குறிக்கும் இந்த ச்லோகத்தில், அவ்விதம் உரைப்பது சிறப்பித்துக் காட்டாது. மேலும் லக்ஷ்மீ தந்த்ரம் (17-81) - உபாயாபாய ஸந்த்யாகீ – மற்ற உபாயங்கள் அபாயங்கள் ஆகியவற்றைக் கைவிட்டு – என்பதற்கு ஏற்ப உள்ளதான உபாயங்களைக் கைவிடுதல் என்பதும், இவ்விதம் பொருள் கொள்வதுடன் சேரும். (1) பொருள் – இயற்ற இயலாத உபாயத்தைச் செய்யத் தொடங்கினாலும், இனி அதில் ஈடுபடவேண்டாம். தொடக்கத்திலேயே அந்த உபாயத்தில் உள்ள ஆசையைக் கைவிடுவதே சிறந்தது. சரணாகதியானது (ஆநுகூல்ய ஸங்கல்பம் முதலான ஐந்து அங்கங்கள்) நீங்கலாக வேறு எதன் துணையையும் நாடுவதில்லை. ப்ரபந்நன் ஒருவன் வேறு உபாயத்தை நாடிவிட்டால், ப்ரஹ்மாஸ்த்ரம் போன்று அதனைப் பொறுத்துக் கொள்ள இயலாமல், வெட்கப்பட்டு பலன் தராமல் நின்றுபோகும். (2) பொருள் – நீண்டகாலம் இயற்றியபடி இருக்கவேண்டியதும், நிறைவான அறிவு கொண்டவர்களுக்கு மட்டுமே உரியதும் ஆகிய பக்தியோகம் முதலான உபாயங்களில் ஈடுபடாமல் உள்ள நீ, வேறு கதியின்றி நிற்கும் அந்த நிலையையே உனக்குத் துணையாகக் கொண்டு, எனது திருவடிகளை உபாயமாக அடைவாயாக. அப்போது நான் உனது பாபங்கள் அனைத்தையும் பொறுத்துக் கொள்வேன் – இப்படியாக அருளிச்செய்த க்ருஷ்ணனுடைய புகழ் அனைத்தையும் நாம் துதிப்போமாக.