Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 59)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

பகவானுடைய ஆணையாகவும், ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் உள்ள கைங்கர்யங்களும் ப்ரபத்திக்கு அங்கம் அல்ல

மூலம் – த்யாகவிதி பக்ஷத்துக்குப் ப்ரமாண விரோதம் வராதபடி இன்னமும் சில கதிகள் உண்டு. “ஆத்ம அசக்ய வ்ருதா ஆயாஸ நிவாரணம் இஹ அபி வா | லஜ்ஜா புரஸ்ஸர த்யாக வாத: அபி அத்ர நியம்யதாம்”, “ஸ்வதுஷ்கரேஷு தர்மேஷு குச காச அவலம்பத: | ஆசா லேச அநுவ்ருத்தி: வா த்யாக உக்த்வா விநிவார்யதே”, “அவிசிஷ்ட பலத்வேந விகல்போ யச்ச ஸூத்ரித: | தந்முகேந அபி ப்ரஹ்மாஸ்த்ர ந்யாய ஸூசநம்”. அசக்யத்திலே ப்ரவ்ருத்தனை “தவிர்” என்கையும், தனக்கு துஷ்கரங்களாய்க் கழிந்து நிற்கிறவற்றிலே அபிநிவேசமுடையவனை “இது வேண்டா” என்கையும், விகல்பித்த உபாயாந்தரங்களிலே ஒன்றை இங்கே கூட்டில் ப்ரஹ்மாஸ்த்ர ந்யாயத்தாலே விரோதிக்கும் என்று கழிக்கையும் விதி ப்ரகாரங்கள்.

– துறத்தல் என்னும் விதிக்கு விரோதம் ஏற்படாதபடி “பரித்யஜ்ய” என்னும் பதத்திற்கு வேறு வழிகளிலும் பொருள் உரைக்கலாம். அவையாவன: ஆத்ம அசக்ய வ்ருதா ஆயாஸ நிவாரணம் இஹ அபி வா லஜ்ஜா புரஸ்ஸர த்யாக வாத: அபி அத்ர நியம்யதாம் – அல்லது “பரித்யஜ்ய” என்பதற்கு தன்னால் கைக்கொள்ள இயலாதபடி உள்ள பக்தியோகம் போன்றவற்றில் ஈடுபடவேண்டாம் என்று மறுப்பதும் பொருள் என்று கொள்ளலாம். இவ்விதம் கொள்ளும்போது, வெட்கம் காரணமாகக் கைவிடுவதும் அடங்கும் – என்றும், ஸ்வதுஷ்கரேஷு தர்மேஷு குச காச அவலம்பத: ஆசா லேச அநுவ்ருத்தி: வா த்யாக உக்த்வா விநிவார்யதே – வெள்ளத்தில் சிக்கிய ஒருவன் தர்ப்பை மற்றும் நாணல் ஆகியவற்றைப் பிடித்துக் கரையேற முயல்வது போன்று, தனக்கு இயலாத தர்மங்களில் ஈடுபட முயலுதலை “பரித்யஜ்ய” என்பது தடுப்பதாகவும் கொள்ளலாம் – என்றும், அவிசிஷ்ட பலத்வேந விகல்போ யச்ச ஸூத்ரித: தந்முகேந அபி ப்ரஹ்மாஸ்த்ர ந்யாய ஸூசநம் – உபநிஷத்துக்களில் கூறப்பட்டுள்ள முப்பத்து இரண்டு வித்யைகளும் ஒரே போன்று பலனை அளிப்பதால், அவற்றில் ஏதேனும் ஒன்றைக் கைக்கொள்ளுதலே போதுமானது என்று ப்ரஹ்மஸூத்ரம் கூறுகிறது. இவ்விதம் மற்ற வித்யைகளைக் கைக்கொண்டால், ப்ரஹ்மாஸ்த்ரம் போன்ற ப்ரபத்தி பயனற்றுப் போகும் என்பதையே “பரித்யஜ்ய” என்பதில் உள்ள துறத்தலானது தெரிவிக்கிறது – என்றும் கொள்க. ஆக இங்கு கூறப்படுவது என்னவென்றால் – தன்னால் இயலாத ஒன்றைச் செய்ய முயலும் ஒருவனைக் குறித்து “தவிர்ப்பாயாக” என்று தடுத்தல், தன்னால் இயலாது என்று அறிந்த பின்னரும் அவற்றில் ஈடுபட உறுதியாக உள்ளவனைக் குறித்து “இது வேண்டாம்” என்று கூறுதல், முக்தியை விரும்பும் ஒருவன் ப்ரபத்தி அல்லாமல் உள்ள மற்ற வித்யையில் ஏதேனும் ஒன்றைக் கைக்கொள்ள முயலும்போது, ப்ரஹ்மாஸ்த்ரம் போன்று ப்ரபத்தி பலனற்றுப் போகும் என்று கூறுதல் – ஆகும்.