Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 57)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

பகவானுடைய ஆணையாகவும், ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் உள்ள கைங்கர்யங்களும் ப்ரபத்திக்கு அங்கம் அல்ல

மூலம் – இப்படி இவன் பகவதாஜ்ஞையாலே அநுஷ்டிக்கிற நித்ய நைமித்திகங்களும், பகவதநுஜ்ஞையாலே இவனுக்கப்பே ப்ரயோஜநமாக அநுஷ்டிக்கிற ஏற்றமான கைங்கர்யங்களும் இப் ப்ரபத்தியோடு துவக்கற்று நின்ற நிலை “ஸர்வதர்மாந் பரித்யஜ்ய” என்கிற விதாநத்தாலே ஸித்தமாயிற்று. “அத: சக்யாநி ஸர்வாணி ந ப்ரபத்த்யர்த்தம் ஆசரேத் | அசக்யேஷு ச ஸாமர்த்யம் ந ததர்த்தம் ஸமார்ஜயேத்”.

– பரமைகாந்திகளாக உள்ளவர்கள், நித்ய நைமித்திக கர்மங்களை ஸர்வேச்வரனுடைய கட்டளைகள் என்றே இயற்றுவார்கள். பகவானால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கர்மங்களை அவனுடைய மகிழ்ச்சிக்காகவே செய்வார்கள். ஆனால் இந்த இரண்டுமே ப்ரபத்தியுடன் எந்தவிதமான சம்பந்தமும் அற்றதாகவே இருக்கும் என்னும் நிலையானது “ஸர்வதர்மாந் பரித்யஜ்ய” என்னும் விதி மூலம் உண்டாகிறது. அத: சக்யாநி ஸர்வாணி ந ப்ரபத்த்யர்த்தம் ஆசரேத் | அசக்யேஷு ச ஸாமர்த்யம் ந ததர்த்தம் ஸமார்ஜயேத் – ஆகவே ஒருவன் தன்னால் இயன்ற அனைத்தையும் ப்ரபத்தியின் அங்கமாக இயற்றுதல் கூடாது, தனக்குச் சக்தியில்லாத கர்மங்களை ப்ரபத்தியின் அங்கமாக எண்ணி கைக்கொள்ளுதலும் கூடாது.