Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 56)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

பரமைகாந்திகள் அல்லாதவர்கள் செய்யும் கைங்கர்யம்

(1) ஸாக்ஷாத் லக்ஷ்மீபதௌ ஏவ க்ருதம் கைங்கர்யம் அஞ்ஜஸா ஸார கல்க விபாகேந த்விதா ஸாத்பி: உதீர்யதே (2) க்ருதக்ருத்யஸ்ய கைங்கர்யம் யத் அநந்ய ப்ரயோஜநம் குர்வாதி ரக்ஷணார்தம் வா தத் ஸாரம் ஸம்ப்ரசக்ஷதே (3) டம்பார்த்தம் பரபீடார்த்தம் தந்நிரோதார்த்தம் ஏவ வா ப்ரயோஜநா அந்தரார்த்தம் வா கைங்கர்யம் கல்க இஷ்யதே பரமைகாந்திகளல்லாதார் பண்ணும் கைங்கர்யத்தை ஸர்வேச்வரன் திருவடிகளாலே கைக்கொள்ளுமென்னுமிடத்தையும், பரமைகாந்திகள் பண்ணும் கைங்கர்யத்தைத் திருமுடியாலே கைக்கொள்ளுமென்னுமிடத்தையும் “தத் ஸர்வம் தேவதேவஸ்ய சரணாவுபதிஷ்டதே” என்றும், “யா: க்ரியா: ஸம்ப்ரயுக்தா: ஸ்யு: ஏகாந்த கத புத்திபி: தா: ஸர்வா: சிரஸா தேவ: ப்ரதிக்ருஹ்ணந்தி வை ஸ்வயம்” என்றும் ஸ்ரீவேதவ்யாஸ பகவான் அருளிச்செய்தான்.

– (1) மஹாலக்ஷ்மியின் நாயகனிடம் செய்யப்பட்ட கைங்கர்யங்கள் அனைத்தும் ஸாரம் மற்றும் சக்கை என்னும் இருவிதமாக உள்ளதாக ஸாதுக்களால் கூறப்படுகிறது. (2) எந்தவிதமான பலனையும் எதிர்பாராமல் உள்ளவைகள் மற்றும் ஆசார்யன் போன்றவர்களைக் காப்பாற்றுவதற்காகச் செய்யப்படுபவைகள் முதலான கைங்கர்யங்களை ஸாரமாகக் கூறுகிறார்கள். (3) டம்பம், மற்றவர்களுக்குத் துன்பத்தை உண்டாக்குதல், மற்றவர்களைக் கைங்கர்யம் செய்யவிடாமல் தடுத்தல், மற்ற பலன்கள் ஆகியவற்றுக்காகச் செய்யப்படும் கைங்கர்யங்களை சக்கை என்று கூறுகிறார்கள். பரமைகாந்திகள் அல்லாதவர்களால் செய்யப்படும் கைங்கர்யங்களைப் பகவான் தனது திருவடிகளால் ஏற்கிறான் என்றும், பரமைகாந்திகளால் செய்யப்படும் கைங்கர்யங்களைப் பகவான் தனது திருமுடியால் ஏற்கிறான் என்றும் வ்யாஸபகவான் அருளிச்செய்தார்; மஹாபாரதம் சாந்திபர்வம் (353-63, 64) - தத் ஸர்வம் தேவதேவஸ்ய சரணாவுபதிஷ்டதே – தேவர்களுக்கு அளிக்கப்பட்ட அவிர்பாகமானது பகவானின் திருவடித்தாமரையில் சேர்கிறது; யா: க்ரியா: ஸம்ப்ரயுக்தா: ஸ்யு: ஏகாந்த கத புத்திபி: தா: ஸர்வா: சிரஸா தேவ: ப்ரதிக்ருஹ்ணந்தி வை ஸ்வயம் – பரமைகாந்திகளால் செய்யப்படும் கர்மங்களை பகவான் தானே தனது திருமுடியால் ஏற்கிறான்.