Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 54)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
ஸந்த்யாவந்தனம் போன்றவற்றை விடக்கூடாமை, மற்ற கைங்கர்யங்களை விரோதம் வராமல் செய்தல்
மூலம் – ஸந்ந்யாஸாச்ரமஸ்தர்க்குப் பண்டுள்ளவை சிலவற்றை நிஷேதித்துப் புதியனவாகச் சிலவற்றை விதிக்குமாபோலே, பாகவத தத்வமடியாகச் சிலவற்றை நிஷேதித்துச் சிலவற்றை அபூர்வமாக விதித்தாலும், “ஸந்த்யாஹீந: அசுசிர் நித்யம் அநர்ஹ: ஸர்வகர்மஸு” இத்யாதிகளிலே அவச்ய கர்த்தவ்யங்களாகச் சொல்லப்பட்ட கர்மங்களை விடவொண்ணாது. தர்மசாஸ்த்ர ஸூத்ரபேதங்களிற்போலே பகவச்சாஸ்த்ர ஸம்ஹிதாபேதங்களிலும் இதிஹாஸ புராணங்களிலும் சொல்லும் ஸந்த்யோபாஸந பேதங்களை அவ்வோ சாஸ்த்ரங்களிலே இழிந்தவர்கள் அநுஷ்டிக்கக்கடவர்கள். “தைவதாந்யபிகச்சேது” என்றும், “தேவஸ்தாந ப்ரணாமனம்” என்றும் இப்புடைகளிலே தர்மசாஸ்த்ர இதிஹாஸாதிகளிற் சொன்ன ஆசாரமும் பரமைகாந்திக்கு சாஸ்த்ர பலத்தாலே பகவத்விஷயத்திலே நியதம். ஆகையால் ஒரு சாஸ்த்ரத்துக்கும் விரோதமில்லை. “தஸ்மாத் அஷ்டாக்ஷரம் மந்த்ரம் மத்பக்தைர் வீதகல்மஷை: | ஸந்த்யாகாலேஷு ஜப்தவ்யம் ஸததம் சாத்மசுத்தயே” என்று ஸ்ரீவைஷ்ணவ தர்மசாஸ்த்ரங்களிற் சொன்னதுவும், “த்வயமர்த்தாநுஸந்தாநேந ஸஹ ஸதைவம் வக்தா” என்று கத்யத்திலருளிச் செய்ததுவும் மற்றும் இப்புடைகைளில் உள்ளவையுமெல்லாம் அவச்ய கர்த்தவ்யங்களான நித்ய நைமித்திகங்களுக்கு விரோதம் வாராதபடி அவற்றுக்குப் போக்கி மிக்க காலத்திலேயாகக் கடவன். “ச்ரௌத ஸ்மார்த்தா விருத்தேஷு காலேஷு ஜபமாசரேத்” என்று நாரதாதிகளும் சொன்னார்கள். “ஹுத்வா அக்நீந் அக்நிஹோத்ராதௌ உக்தம் காலமபி க்ஷிபந்” என்று வங்கிபுரத்து நம்பியும் அருளிச்செய்தார். பாஷ்யகாரர் அந்திமதசையிலும் வருந்தியெழுந்திருந்து ஸந்த்யாகாலத்திலே ஜலாஞ்ஜலி ப்ரக்ஷேபம் பண்ணியருளினார்.
– ஸந்யாஸிகளுக்கு, அவர்களுடைய முந்தைய ஆச்ரம நிலைகளில் விதிக்கப்பட்ட கர்மங்களில் சில அம்சங்கள் தடுக்கப்பட்டும், சில அம்சங்கள் புதியதாகச் சேர்க்கப்பட்டும் உள்ளதைக் காணலாம். இதே போன்று பாகவதர்களுக்கு ஒரு சில கர்மங்கள் தடுக்கப்பட்டும், சில புதியதாகச் சேர்க்கப்பட்டும் உள்ளன. ஆனால், தக்ஷ ஸ்ம்ருதி (2-27) - ஸந்த்யாஹீந: அசுசிர் நித்யம் அநர்ஹ: ஸர்வகர்மஸு – ஸந்த்யாவந்தனம் செய்யாதவன் எப்போதுமே அசுத்தமானவனே ஆவான், அவன் வேறு எந்தக் கர்மங்களையும் செய்யும் தகுதி கொண்டவன் அல்லன் – என்று கூறுவதற்கு ஏற்ப கண்டிப்பாகச் செய்யப்படவேண்டும் என்று விதிக்கப்பட்ட கர்மங்களை யாராக இருந்தாலும் கைவிட இயலாது. தர்மசாஸ்த்ரங்கள் மற்றும் ஸூத்ரங்களில் ஸந்த்யாவந்தன முறைகளில் வேறுபாடு உள்ளது போன்று, பாஞ்சராத்ர ஸம்ஹிதைகள் மற்றும் இதிஹாஸ புராணங்களிலும் ஸந்த்யாவந்தன முறைகளில் வேறுபாடு உள்ளது; ஆகவே அந்தந்த சாஸ்த்ரங்களைப் பின்பற்றுபவர்கள், அந்தந்த முறைகளுக்கு ஏற்ப அவற்றை இயற்றவேண்டும். மநு ஸ்ம்ருதி (4-153) – தைவதாந்யபிகச்சேது – காப்பாற்றவேண்டும் என்று தெய்வங்களை ப்ரார்த்திக்கக் கடவன் – என்றும், மஹாபாரதம் - தேவஸ்தாந ப்ரணாமனம் – தெய்வ ஆலயத்தைக் கண்டால் வணங்கவேண்டும் – என்றும் தர்மசாஸ்த்ரம் மற்றும் இதிஹாஸம் ஆகியவற்றில் கூறப்பட்ட ஆசாரங்கள், பரமைகாந்திக்கு அந்த சாஸ்த்ரங்களின் வலிமை காரணமாக பகவானைக் குறித்து மட்டுமே இருப்பதாகக் கொள்ளவேண்டும். ஆகவே எந்த சாஸ்த்ரங்களுக்கும் முரண்பாடு இல்லை. மஹாபாரதம் ஆச்வமேதிக பர்வம் (98-69) - தஸ்மாத் அஷ்டாக்ஷரம் மந்த்ரம் மத்பக்தைர் வீதகல்மஷை: | ஸந்த்யாகாலேஷு ஜப்தவ்யம் ஸததம் சாத்மசுத்தயே – ஆகவே தங்களுடைய மனதில் உள்ள களங்கங்கள் நீங்கப் பெற்ற எனது பக்தர்கள், ஸந்த்யாகாலத்திலும் அல்லது எப்போதும் அஷ்டாக்ஷரத்தை ஜபித்தபடி இருப்பார்களாக – என்றும், சரணாகதி கத்யம் – த்வயம் அர்த்தாநுஸந்தாநேந ஸஹ ஸதைவம் வக்தா – (ஸ்ரீரங்கநாதன் கூறுவது) த்வய மந்த்ரத்தை அதன் பொருளுடன் உணர்ந்து ஜபித்தபடி இருப்பாயாக – என்றும் உள்ள வரிகளின்படி அஷ்டாக்ஷரம் மற்றும் த்வயம் ஆகியவற்றை ஜபித்தபடி இருத்தல்வேண்டும் என்று கூறப்பட்டாலும், நித்ய நைமித்திக கர்மங்களை அந்தந்த காலங்களில் இயற்றிய பின்னர், எஞ்சியுள்ள நேரத்தில் மட்டுமே இதனைச் செய்யவேண்டும் என்று கருத்து. நாரதர் போன்றவர்கள் - ச்ரௌத ஸ்மார்த்தா விருத்தேஷு காலேஷு ஜபமாசரேத் – நித்ய நைமித்திக காலங்களில் செய்யவேண்டிய கர்மங்களுக்கு தடை ஏற்படாதவிதத்தில் ஜபிக்கவேண்டும் – என்றது காணலாம். வங்கிபுரத்து நம்பியும் - ஹுத்வா அக்நீந் அக்நிஹோத்ராதௌ உக்தம் காலமபி க்ஷிபந் – அக்னிஹோத்ரம் முதலானவற்றில் அக்னிகளில் ஹோமம் செய்து, இப்படியாகக் காலத்தைக் கழித்து – என்றார். எம்பெருமானார் தனது அந்திம காலத்தில், உடல் தள்ளாமையுடன் இருந்தபோதிலும், ஸந்த்யாகாலத்தில் அர்க்யம் முதலானவற்றை அளித்தபடியே இருந்தார்.