Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 53)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
விலக்கவேண்டிய மற்ற கருத்துக்கள்
மூலம் – இப்படி ப்ரபந்நனுக்கும் சாஸ்த்ரவச்யனாய் சாஸ்த்ரோக்த கைங்கர்யமே பண்ண வேண்டுகையாலே விதி நிஷேத லங்கநபேக்ஷமும் விஹித நிஷித்த த்யாக பக்ஷமும், “வர்ணாச்ரம தர்மங்கள் ஔபாதிகங்களாகையாலே ஸ்வரூபஜ்ஞாநம் பிறந்தவனுக்குத் த்யாஜ்யங்கள்” என்கிற பக்ஷமும், “இவை செய்யவுமாம், தவிரவுமாம்” என்கிற பக்ஷமும், “இவை தவிர்ந்தாலும் உகப்பிக்குமத்தனையொழிய வேறொரு ப்ரத்யவாயமில்லை” என்கிற பக்ஷமும், “இவை அநுஷ்டியாதபோது லோக விரோத மாத்ரமே ப்ரத்யவாயம்” என்கிற பக்ஷமும், மற்றும் இப்புடைகளிலுள்ள பக்ஷங்களுமெல்லாம் ஸம்மயங் ந்யாயாநுக்ரூஹீத சாஸ்த்ர ஸம்ப்ரதாய விருத்தங்களானபடியாலே ஸத்த்வஸ்தர்க்கு அநுபாதேயங்கள்.
– இப்படியாக ப்ரபந்நனும் சாஸ்த்ரங்களுக்குக் கட்டுப்பட்டே இருத்தல் வேண்டும் என்றும், சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட முறையிலேயே கைங்கர்யங்கள் செய்யவேண்டும் என்றும் தெளிவாகிறது. ஆகவே, ப்ரபந்நனால் கைக்கொள்ளலாம் என்று கீழே கூறப்பட்டுள்ள பல கருத்துக்கள், சிறந்த ந்யாயங்களுடைய ஆதரவைப் பெற்றுள்ள சாஸ்த்ரங்களுக்கும் ஸம்ப்ரதாயங்களுக்கும் முரணாக உள்ளதால், ந்யாயத்தின்படியும் ஸத்வத்திலும் நிற்பவர்களால் இவை தள்ளத்தக்கவை ஆகின்றன; அவையாவன – விதிக்கப்பட்ட கர்மங்களைத் துறத்தல் மற்றும் தடுக்கப்பட்ட கர்மங்களைச் செய்தல் ஆகியவற்றை மீறலாம்; விதிக்கப்பட்ட கர்மங்களைத் துறத்தல் மற்றும் தடுக்கப்பட்ட கர்மங்களைச் செய்தல் ஆகியவற்றைக் கைக்கொள்ளலாம்; வர்ணாச்ரம தர்மங்கள் என்பவை சரீரத்தின் காரணமாக ஏற்பட்டவை என்பதால், ஆத்ம ஸ்வரூபத்தைக் குறித்த ஞானம் பிறந்தவன் அவற்றைத் துறக்கலாம்; வர்ணாச்ரம தர்மங்களை செய்தாலும் செய்யலாம், செய்யாவிடினும் பாதகமில்லை; அவற்றைத் துறப்பதன் மூலம் பகவானுடைய மகிழ்ச்சியை இழப்பது மட்டுமே நிகழும், அல்லாது வேறு ஏதும் இல்லை; இவற்றைக் கைவிடும்போது உலகில் உள்ளவர்களால் பழிக்கப்படுவது மட்டுமே நிகழும் – என்பதாகும்.