Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 52)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

சாஸ்த்ரங்களை மீறி தாங்கள் விரும்புகின்ற மந்த்ரங்களைக் கைக்கொள்ளக் கூடாது

மூலம் – ஆனபின்பு பாஷ்யகாரருடையவும் தச்சிஷ்ய ப்ரவிஷ்யர்களுடையவும் உபதேசாநுஷ்டாநங்களிலே நிஷ்டையுடையார்க்கு ஆகம ஸித்தாந்த அநுவர்த்திகளான ஸம்ஹிதா விசேஷங்களில் ப்ரதிநியதமாகச் சொல்லும் மந்த்ரவிசேஷங்களைக் கொண்டு க்ரியா விசேஷங்கள் அநுஷ்டிக்கவொண்ணாது அதிகாராதிகளுக்கு அநுரூபமாகச் சதுர்வித பஞ்சராத்ரமும் விபக்தமாய் நிற்கும் நிலையும், வசந விரோதமில்லாவிடத்தில் அநுக்தமந்யதோ க்ராஹ்யம் என்கிற ந்யாயம் நடக்கும்படியும், நாலாச்ரமத்திலும் ப்ரஹ்மவித்யையும் மோக்ஷபலமும் உண்டென்று சாரீரகாதிகளிலே ஸமர்த்தித்தாற்போலே ஆகம ஸித்தாந்தாதிகள் நாலிலும் ஸாக்ஷாந்மோக்ஷோபாயமும் மோக்ஷ ப்ராப்தியும் உண்டென்றும் ஸ்ரீபாஞ்சராத்ர ரக்ஷையில் உபபாதித்தோம். இச்சாஸ்த்ரங்களில் வ்யவஸ்திதமாக விதித்தபடியொழியத் தந்தமக்கு ருசித்த மந்த்ரங்களைக் கொண்டு ஸர்வகர்மங்களையும் அநுஷ்டித்தால், ப்ராயச்சித்தாதிகளும் பரக்கச் சொல்லப்பட்டன. ஆனபின்பு, முக்தனாமளவும் ஸ்வாதிகாராநுகுணமாகச் சாஸ்த்ரம் சொன்ன கட்டளையன்றிக்கே கைங்கர்யம் பண்ண விரகில்லை.

– ஸ்ரீபாஷ்யகாரர், அவருடைய சிஷ்யர்கள், அவர்களுடைய சிஷ்யர்கள் என்று இப்படிப்பட்ட பரம்பரையில் உள்ளவர்களுடைய உபதேசங்கள் மற்றும் அவர்களுடைய விதிகளை எப்போதும் சிந்தையில் கொண்டபடி உள்ளவர்கள், ஸாத்வதம் போன்ற ஆக ஸித்தாந்தங்களுக்கே உரியதான ஸம்ஹிதைகளில் கூறப்பட்டுள்ள மந்த்ரங்கள் மூலமாக தங்களுடைய கர்மங்களை இயற்றுதல் கூடாது. பாஞ்சராத்ரத்தில் உள்ளதான ஆகம ஸித்தாந்தம், மந்த்ர ஸித்தாந்தம், தந்த்ர ஸித்தாந்தம் மற்றும் தந்த்ராந்தர ஸித்தாந்தம் ஆகிய நான்கு ஸித்தாந்தங்களில், அந்தந்த அதிகாரிகளுக்கு ஏற்றபடியான வரையறைகள் உள்ளன. எந்தவிதமான தடைகளையும் கூறாத ச்லோகங்கள் உள்ள இடத்தில் மட்டுமே, ஒரு ஸித்தாந்தத்தில் கூறப்படாதவற்றை, வேறொரு ஸித்தாந்தத்திலிருந்து கைக்கொள்ளலாம் என்னும் விதியும் உள்ளது. நான்கு ஆச்ரமங்களில் உள்ளவர்களுக்கும் ப்ரஹ்மவித்யை மற்றும் மோக்ஷம் ஆகியவை உண்டு என்று ப்ரஹ்மஸூத்ரம் முதலானவற்றில் கூறப்பட்டது போன்று, இந்த நான்கு ஆக ஸித்தாந்தங்களில் ஈடுபடுபவர்களுக்கும் மோக்ஷ உபாயம் மற்றும் மோக்ஷம் ஆகியவை உண்டு என்று பாஞ்சராத்ர ரக்ஷையில் கூறப்பட்டது. இந்தச் சாஸ்த்ரங்களில் அந்தந்த அதிகாரிகளுக்கு ஏற்ப விதிக்கப்பட்ட மந்த்ரங்கள் அல்லாமல், தங்களுக்கு விருப்பமான மந்த்ரங்கள் மூலமாகக் கர்மங்களை இயற்றுபவர்களுக்கு ஏற்றபடியான ப்ராயச்சித்தங்களும் கூறப்பட்டுள்ளன. ஆகவே ஒருவன் முக்தி அடையும்வரை தன்னுடைய அதிகாரத்திற்கு ஏற்ப சாஸ்ந்த்ரங்கள் கூறும் முறையை மீறி கைங்கர்யம் செய்தல் என்பதற்கு இடமில்லை.