Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 50)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

வர்ணாச்ரம தர்மங்கள் பரமைகாந்தி என்னும் நிலையை மாற்றுவதில்லை

மூலம் – “நாராயணம் பரித்யஜ்ய ஹ்ருதிஸ்தம் ப்ரபுமீச்வரம் | யோ அந்யமர்ச்சயதே தேவம் பரபுத்தயா ஸ பாபபாக்”, “யஸ்து நாராயணம் தேவம் ஸாமாந்யேநாபி மந்யதே | ஸ யாதி நரகம் கோரம் யாவச்சந்த்ர திவாகரம்”, “புத்த ருத்ராதி வஸதீம் மசாநம் சவமேவ ச | அடதீம் ராஜதாநீம் ச தூரத: பரிவர்ஜயேத்” இத்யாதிகளிற்படியே தேவதாந்தரங்களிலே பரத்வ புத்தி பண்ணுதல், ஸமத்வ புத்தி பண்ணுதல், நித்ய நைமித்திகங்களில் துவக்கற்ற தேவதாந்தர ஸ்தலங்களிலே செல்லுதல் செய்யில் பரமைகாந்திக்கு தோஷமாமல்லது, நித்ய நைமித்திகங்களில் ஆராத்யனான ஸர்வாந்தர்யாமிக்குச் சரீரமாய் நிற்கிற நிலையில் இத்தேவதைகள் பக்கல் பரத்வ புத்தியும் ஸாம்ய புத்தியும் ஸ்வநிஷ்டத்வ புத்தியும் ஆராத்யத்வ புத்தியும் பல ப்ரதாந புத்தியும் இல்லாமையாலே உபாஸ்ய விசேஷணங்களான ப்ராண வைச்வாநர த்ரைலோக்யாதிகளால் இவனுக்கு வ்யபிசாரம் வாராதாப்போலே, சாஸ்த்ர ஸித்தங்களான அக்நீந்த்ராதி விசேஷணங்களால் இவனுக்கு ஏகாந்த்ய விரோதம் வாராது.

– ப்ரஜாபத்ய ஸ்ம்ருதி - நாராயணம் பரித்யஜ்ய ஹ்ருதிஸ்தம் ப்ரபுமீச்வரம் யோ அந்யமர்ச்சயதே தேவம் பரபுத்தயா ஸ பாபபாக் – தன்னுடைய இதயத்தில் வசிப்பவனும் தன்னை நியமிக்கும் எஜமானனும் ஆகிய நாராயணனை விடுத்து மற்ற தெய்வங்களை உயர்ந்ததாகக் கருதி வணங்குபவன் பாபி ஆவான் – என்றும், மஹாபாரதம் - யஸ்து நாராயணம் தேவம் ஸாமாந்யேநாபி மந்யதே ஸ யாதி நரகம் கோரம் யாவச்சந்த்ர திவாகரம் – நாராயணனை மற்ற தெய்வங்களுக்குச் சமமாக எண்ணிபவன் சந்த்ரன் மற்றும் சூரியன் உள்ளவரை கோரமான நரகத்தில் கிடப்பான் – என்றும், சாண்டில்ய ஸ்ம்ருதி (4-19) - புத்த ருத்ராதி வஸதீம் மசாநம் சவமேவ ச அடதீம் ராஜதாநீம் ச தூரத: பரிவர்ஜயேத் – புத்தன், ருத்ரன் முதலானவர்களுடைய ஆலயங்கள், இடுகாடு, பிணம், வனம், தலைநகர் ஆகியவற்றின் அருகில் செல்லாமல் தூரமாக விலகிச் செல்லவேண்டும் – என்றும் கூறுவதற்கு ஏற்ப பரமைகாந்தி ஒருவன் மற்ற தெய்வங்களை உயர்ந்ததாக எண்ணுதல், அவர்களை நாராயணனுக்குச் சமமாக எண்ணுதல், அவர்களுக்கு நித்ய நைமித்திக கர்மங்களுடன் எந்தவிதமான ஸம்பந்தமும் இல்லாதபோது அவர்களுடைய ஆலயங்களுக்குச் செல்லுதல் ஆகியவற்றைச் செய்யும்போது அவனுக்குத் தோஷம் உண்டாகிறது. ஆனால், நித்ய நைமித்திக கர்மங்கள் மூலமாக ஆராதிக்கப்படுபவனும், அனைத்திற்கும் அந்தர்யாமியாக உள்ளவனும் ஆகிய ஸர்வேச்வரனுக்கு இந்தத் தெய்வங்கள் அனைத்தும் சரீரமாக உள்ளனர் என்று எண்ணும்போது - இந்தத் தெய்வங்கள் மிகவும் உயர்ந்தவை என்றும், இவர்கள் நாராயணனுக்குச் சமம் என்றும், இவர்கள் சுதந்திரமானவர்கள் என்றும், இவர்களே கர்மங்களால் ஆராதிக்கப்படுகிறார்கள் என்றும், இவர்களே அனைத்து பலன்களையும் அளிக்கிறார்கள் என்றும் எண்ணுவது நிகழாது; ஆகவே பல்வேறு உபாஸன வித்யைகளாக உள்ள ப்ராணவித்யை, வைச்வாநர வித்யை, த்ரைலோக்ய வித்யை போன்றவற்றால் மற்ற தேவதைகளுடைய ஸம்பந்தம் உண்டாகாமல் இருப்பது போன்று, இந்தப் பரமைகாந்திக்கும் சாஸ்த்ரங்களால் விதிக்கப்பட்ட அக்னி, இந்த்ரன் போன்ற சொற்களை அந்தந்த மந்த்ரங்களில் உச்சரிப்பதால் இவனுடைய பரமைகாந்தித் தன்மை நீங்காது.