Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 49)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
வர்ணாச்ரம தர்மங்கள் பரமைகாந்தி என்னும் நிலையை மாற்றுவதில்லை
மூலம் – “அஹம் ஹி ஸர்வ யஜ்ஞாநாம் போக்தா ச ப்ரபுரேவ ச”, “ஹவ்ய கவ்ய புகேகஸ்த்வம் பித்ருதேவ ஸ்வரூபத்ருத்”, “யே யஜந்தி பித்ரூந் தேவாந் ப்ராஹ்மணாந் ஸஹுதாசநாந் ஸர்வபூதாந்தராத்மாநம் விஷ்ணுமேவ யஜந்தி தே” என்கிறபடியே ஸர்வாந்தர்யாமியானவனே ப்ரதிபுத்தனான இவனுக்கு ஆராத்யனாகையாலே இப்படித் தெளிந்து அநுஷ்டிக்குமவனுக்கு யதாசாஸ்த்ரம் அநுஷ்டிக்கிற கைங்கர்யங்களால் உபாயாந்தர ஸ்பர்சம் வாராதாப்போலவும், கைங்கர்யார்த்தங்களான த்ரவ்யார்ஜந நிவேதிதோபயோகாதிகளால் ப்ரயோஜநாந்தர ஸ்பர்சம் வாராதாப்போலவும், ஆராத்ய விசேஷணமாக விதி பல ப்ராப்தங்களான சேதநாசேதநங்களால் தேவதாந்தர ஸ்பர்ச தோஷம் வாராது.
– கீதை (9-24) - அஹம் ஹி ஸர்வ யஜ்ஞாநாம் போக்தா ச ப்ரபுரேவ ச – அனைத்து யஜ்ஞங்களாலும் ஆராதிக்கப்படுபவன் நானே ஆவேன் – என்றும், ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-19-73) - ஹவ்ய கவ்ய புகேகஸ்த்வம் பித்ருதேவ ஸ்வரூபத்ருத் – தேவர்கள் வடிவம் கொண்டு ஹவிஸ்ஸுகளையும், பித்ருக்கள் வடிவம் கொண்டு கவ்யங்களையும் நீயே ஏற்கிறாய் – என்றும், மஹாபாரதம் சாந்திபர்வம் (355-41) - யே யஜந்தி பித்ருந் தேவாந் ப்ராஹ்மணாந் ஸஹுதாசநாந் ஸர்வபூதாந்தராத்மாநம் விஷ்ணுமேவ யஜந்தி தே – பித்ருக்கள், தேவர்கள், அந்தணர்கள் மற்றும் அக்னியை ஆராதனை செய்பவர்கள் அனைத்து உயிர்களின் ஆத்மாவான எம்பெருமானையே ஆராதனை செய்கிறார்கள் – என்றும் கூறுவதற்கு ஏற்ப அனைத்திற்கும் அந்தர்யாமியாக உள்ள ஸர்வேச்வரனே ஞானியான ப்ரபந்நனுக்கு ஆராதனை தெய்வமாக உள்ளான். இவ்விதம் அறிந்துகொண்டு உபாஸிக்கும் ஒருவனுக்கு – சாஸ்த்ரங்கள் மூலம் விதிக்கப்பட்ட கைங்கர்யங்களைக் கைக்கொள்ளும் ஒருவனுக்கு மற்ற உபாயங்களுடைய தொடர்பு உண்டாகாமல் இருக்கிறது; மற்ற தேவதைகளுக்காக அந்தந்த கர்மங்களில் விதிக்கப்பட்டபடி பொருளை ஈட்டுதல் மற்றும் நைவேத்யத்தை உட்கொள்ளல் போன்றவற்றால் மற்ற பலன்களை நாடுதல் என்னும் தோஷம் ஏற்படுவதில்லை; அந்தந்த விதிகளுக்கு ஏற்ப மற்ற தேவதைகளை ஆராதிக்க நேர்ந்தாலும், சேதந அசேதநங்களைத் தனது சரீரமாகக் கொண்ட ஸர்வேச்வரனையே ஆராதிப்பதால், மற்ற தேவதைகளுடைய தீண்டுதல் என்னும் தோஷம் இல்லை.