Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 48)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
வர்ணாச்ரம தர்மங்கள் பரமைகாந்தி என்னும் நிலையை மாற்றுவதில்லை
மூலம் – “தேவாந் ருஷீந் பித்ரூந் பகவதாத்மகாந் த்யாத்வா ஸந்தர்ப்யம்” என்று நித்ய ப்ரப்ருதிகளில் ஸ்ரீபாஷ்யகாரர் அருளிச்செய்தபடியே, தத் தத் தேவதா சரீரகனாகப் பரமாத்மாவை அநுஸந்தித்துக் கொண்டு தத் தத் கர்மங்களை அநுஷ்டிக்கை சாஸ்த்ர பல ஸித்தமான இடத்தில் “உபாஸாத் த்ரைவித்யாத்” என்கிறபடியே ப்ரதர்தந வித்யாதிகளில் விதேஷ்யமான திவ்யாத்ம ஸ்வரூபத்தாலும் சேதநாசேதந விசிஷ்டனாகவும் பரமாத்மாவை உபாஸியா நின்றாலும் விசேஷணமான சேதநாசேதநங்களில் ஆராத்யத்வ மில்லாதாப்போலே இவ்விடத்திலும் விசேஷணமான தேவர்ஷி பித்ராதிகளை இவன் ஆராதிக்கிறானல்லன்.
– நித்யக்ரந்தத்தில் - தேவாந் ருஷீந் பித்ரூந் பகவதாத்மகாந் த்யாத்வா ஸந்தர்ப்யம் – தேவர்கள், ரிஷிகள், பித்ருக்கள் ஆகியோரை பகவானையே தங்கள் அந்தர்யாமியாகக் கொண்டவர்களாக த்யானித்து – என்று எம்பெருமானார் அருளிச்செய்ததற்கு ஏற்ப, ஒருவன் தனது வர்ணாச்ரம தர்மங்களைக் கைக்கொள்ளும்போது, அந்தந்த தேவதைகளைச் சரீரமாகக் கொண்டுள்ள பரமாத்மாவே ஆராதிக்கப்படுகிறான் என்று எண்ணியபடி அந்தந்த கர்மங்களை இயற்றவேண்டும் என்றே சாஸ்த்ரங்கள் கூறுகின்றன. ப்ரஹ்மஸூத்ரம் (1-1-32) - உபாஸாத் த்ரைவித்யாத் – என்பதற்கு ஏற்ப ப்ரதர்தந வித்யை முதலானவற்றில் கூறப்படுவது போன்று பரமாத்மா - தனது இயல்பான திவ்யமான ஸ்வரூபத்துடன் உள்ளவனாக, சேதநங்களைத் தனது சரீரமாகக் கொண்டவனாக, அசேதநங்களைத் தனது சரீரமாகக் கொண்டவனாக என்பதான மூன்று விதங்களில் ஆராதிக்கப்படலாம். இப்படியாக பரமாத்மா ஆதாரிக்கப்பட்டாலும், அவனுடைய ஆராதனம் என்பது அந்தந்த சேதந அசேதநங்களைக் குறிப்பதாக ஆகாது. இது போன்றே இங்கும் தேவர்கள், ரிஷிகள் மற்றும் பித்ருக்களை ப்ரபந்நன் ஆராதிப்பதில்லை என்று கருத்து.