Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 47)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

வர்ணாச்ரம தர்மங்கள் பரமைகாந்தி என்னும் நிலையை மாற்றுவதில்லை

மூலம் – “இரண்டு அதிகாரிகளும் ‘ப்ரதிபுத்தா ந ஸேவந்தே’, ‘அநந்ய தேவதா பக்தா:’, ‘நாந்யம் தேவம் நமஸ்குர்யாத்’ இத்யாதிகளிற்படியே பரமைகாந்திகளாயிருக்க, இங்கு ‘நிஜ கர்மாதி பக்தயந்தம்’ என்று அருளிச்செய்தபடியே வர்ணாச்ரமாதி தர்மங்களை இவர்கள் அநுஷ்டிக்கப்புக்கால் அக்நீந்த்ராதி தேவதா வ்யாமிச்ரதையாலே பரமைகாந்தித்வம் குலையாதோ?” என்று வேதாந்த வ்யுத்பத்தி பண்ணாதார் சோத்யம் பண்ணுவார்கள். இவ்விடத்தில் “ஸாக்ஷாதப்யவிரோதம் ஜைமிநி:” என்கிற ஸூத்ரத்தின்படியே அக்நயநாதி வ்யுத்பத்தி வசத்தாலே அக்நயாதி சப்தங்களை ஸர்வேச்வரனுக்கு ஸாக்ஷாத் வாசகங்களாக நிர்வஹிக்கலாமிடத்தில் இவை ஸ்ரீஸஹஸ்ரநாமத்தின் திருநாமங்கள்படியே நிற்கையாலே இவற்றில் தேவதாந்தர ஸ்பர்சமில்லை.

– “பக்தியோகம் மற்றும் ப்ரபத்தி ஆகிய இரண்டுவிதமான அதிகாரிகள் மஹாபாரதம் சாந்திபர்வம் (350-36) - ப்ரதிபுத்தா ந ஸேவந்தே – நல்ல புத்தி உள்ளவர்கள் மற்ற தேவதைகளை வணங்குவதில்லை – என்றும், மஹாபாரதம் ஆச்வமேதிகபர்வம் (104-91) - அநந்ய தேவதா பக்தா: - மற்ற தேவதைகளிடம் பக்தி அற்றவர்களாக – என்றும், பாதராயண ஸூக்தி - நாந்யம் தேவம் நமஸ்குர்யாத் – மற்ற தேவதைகளை நமஸ்கரித்தல் கூடாது – என்றும் கூறுவதற்கு ஏற்ப பரமைகாந்திகளாக உள்ளனர். இவ்விதம் உள்ளபோது, கீதார்த்த ஸங்க்ரஹம் (31) - நிஜ கர்மாதி பக்தயந்தம் – தனது வர்ணாச்ரம தர்மங்களை இயற்றி – என்பதற்கு ஏற்ப வர்ணாச்ரம தர்மங்களை இவர்கள் செய்வதற்கு முனையும்போது, அதில் அக்னி இந்த்ரன் முதலான மற்ற தேவதைகளுடைய ஆராதனங்களும் கலந்துள்ளது; இதன் காரணமாக இவர்களுடைய இந்த பரமைகாந்தி தன்மை பாதிக்காதோ?”, என்று வேதாந்தங்களை சரிவர அறியாத சிலர் கேட்கலாம். இங்கு ப்ரஹ்மஸூத்ரம் (1-2-29) - ஸாக்ஷாதப்யவிரோதம் ஜைமிநி: - அக்னி போன்ற சொற்கள் ஸர்வேவரனையே கூறுவதால் விரோதம் இல்லை என்று ஜைமினி கருதுகிறார் – என்ற ஸூத்ரத்திற்கு ஏற்ப அக்னி முதலான சப்தங்களைப் பிரித்து எடுக்கும்போது அவை ஸர்வேச்வரனையே நேரடியாகக் கூறுவதாகும். ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமத்தில், இது போன்றே பிரித்துப் பொருள் கொள்வது போன்று, இங்கும் கொள்ளலாம். ஆகவே இவற்றில் மற்ற தேவதைகள் கூறப்படவில்லை என்றாகிறது.