Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 46)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
கைங்கர்யம் செய்வது குறித்து ஸ்வாமி ஆளவந்தாருடைய கருத்துக்கள்
மூலம் – ஸ்வதந்த்ர ப்ரபத்தி நிஷ்டன் திறத்தில் இச் ச்லோகங்களை யோஜிக்கும்போது, இவன் அஜ்ஞாநுஜ்ஞைகளாலே பண்ணும் கைங்கர்யமெல்லாம் பக்தியோகாதிகளின் கட்டளை குலையாதிருந்தாலும் ஸ்வாமி ஸந்தோஷமொழிய வேறொரு ஸ்வர்க மோக்ஷாதி ப்ரயோஜநத்துக்கு உபாயமாக அநுஷ்டிக்கிறானல்லாமையாலே இவனுக்கு அநந்யோபாயதையும் அநந்ய ப்ரயோஜநதையும் குலையாதேயிருக்கிறபடியையும், அகிஞ்சநனான இவனுக்கு ஈச்வரன் தானே உபாயாந்தர ஸ்தாநத்திலே நின்று பலம் கொடுக்கிறபடியையும் சொல்லுகையிலே தாத்பர்யம்.
– இந்த ச்லோகங்களை ப்ரபத்தியைக் கைகொண்ட அதிகாரி விஷயத்தில் வைத்து நோக்கினால் – ஸர்வேச்வரனுடைய கட்டளைகளாகவே உள்ள நித்ய நைமித்திக கர்மங்கள் அனைத்தும் பக்தியோகத்தின் பொருட்டு விதிக்கப்பட்டுள்ளதால் அவற்றைக் கைங்கர்யமாகச் செய்தபடி உள்ளான் என்றாலும், பகவானுடைய மகிழ்ச்சிக்காகவே அவற்றை இயற்றுகிறான் அல்லாமல் ஸ்வர்க்கம், மோக்ஷம் முதலான பலன்களை அடைவதற்காக இயற்றவில்லை; ஆகவே மோக்ஷம் போன்றவை பொருட்டு வேறு எந்தவிதமான உபாயத்தையும் கைக்கொள்ளாமல் உள்ளான். ஆகவே இந்த ச்லோகங்கள் – இவனுக்கு மற்ற உபாயங்கள் இல்லை என்பதையும், மற்ற பலன்களை இவன் நாடுவதில்லை என்பதையும் (அதாவது இந்த நிலைகள் இவனுக்கு அகலாமல் உள்ளன என்று கருத்து), வேறு உபாயம் இன்றி உள்ள இவனுக்கு, ஈச்வரன் தானே மற்ற உபாயங்களின் இடத்தில் நின்று அவற்றுக்கான பலனை அளிக்கிறான் என்பதையும் கூறுவதாக உள்ளன.