Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 44)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

கைங்கர்யம் செய்வது குறித்து ஸ்வாமி ஆளவந்தாருடைய கருத்துக்கள்

மூலம் – “தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்ய வ்யவஸ்திதௌ ஜ்ஞாத்வா சாஸ்த்ர விதாநோக்தம் கர்ம கர்த்தும் இஹ அர்ஹஸி” என்ற உபதேசம், ஸர்வாதிகாரிகளுக்கும் பொதுவாயிருக்கும். ஆளவந்தார் ஸ்ரீகீதார்த்த ஸங்க்ரஹத்திலே “ஜ்ஞாநீ து பரமைகாந்தி ததாயத்தாத்ம ஜீவந: தத் ஸம்ச்லேஷ வியோகைக ஸுக துக்கஸ்ததேகதீ:”, “பகவத் த்யாந யோகோக்தி வந்தந ஸ்துதி கீர்த்தநை: லப்தாத்மா தத் கத ப்ராண மநோ புத்தி இந்த்ரிய க்ரிய:”, “விஜகர்மாதி பக்தயந்தம் குர்யாத் ப்ரீத்யைவ காரித: உபாயதாம் பரித்யஜ்ய ந்யஸ்யேத்தேவே து தமபீ:” என்று அருளிச் செய்தவிடத்தில் “ப்ரீத்யைவ காரித:” என்றதுவும் சாஸ்த்ரம் வேண்டாவென்றபடியன்று; இங்கு சாஸ்த்ரம் கொண்டே அறியவேண்டுகிற கைங்கர்யந்தன்னில், ஸ்வாமி ஸந்தோஷ ஜநகத்வமடியாக சேஷபூதனான தனக்குப் பிறக்கிற ப்ரீதியினுடைய ப்ரேரகத்வ அதிசயம் சொல்லுகையிலே தாத்பர்யம்.

– கீதையில் (16-24) - தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்ய வ்யவஸ்திதௌ ஜ்ஞாத்வா சாஸ்த்ர விதாநோக்தம் கர்ம கர்த்தும் இஹ அர்ஹஸி – இந்த உலகில் செய்யத்தக்கது எது, செய்யத்தகாதது எது என்பதற்கான ப்ரமாணம் சாஸ்த்ரமே ஆகும். இவ்விதம் அறிந்துகொண்டு சாஸ்த்ரங்கள் கூறும் முறைகளில் உனது கர்மங்களை இயற்றுவாயாக – என்றுள்ள உபதேசமானது அனைத்துவிதமான அதிகாரிகளுக்கும் பொருந்துவதாகும். ஸ்வாமி ஆளவந்தார் கீதார்த்த ஸங்க்ரஹத்தில் (29) - ஜ்ஞாநீ து பரமைகாந்தி ததாயத்தாத்ம ஜீவந: தத் ஸம்ச்லேஷ வியோகைக ஸுக துக்கஸ்ததேகதீ: - ஞானி என்பவன் ஸர்வேச்வரனைத் தவிர வேறு தெய்வத்தை ஏற்காதவன், ஸர்வேச்வரனுக்கு வசப்பட்டதான வாழ்க்கையை வாழ்பவன், அவனுடன் கூடியிருத்தலை இன்பமாகவும் பிரிவதைத் துன்பமாகவும் கொண்டவன் ஆவான்; (30) - பகவத் த்யாந யோகோக்தி வந்தந ஸ்துதி கீர்த்தநை: லப்தாத்மா தத் கத ப்ராண மநோ புத்தி இந்த்ரிய க்ரிய: - பகவானை த்யானித்தல், அவனைக் காணுதல், அவனை வணங்குதல், அவனைத் துதித்தல், அவனைக் குறித்துப் புகழ்ந்தபடி இருத்தல், அவனிடம் நிலையாக உள்ள ப்ராணன் – மனம் – புத்தி – இந்த்ரியங்கள் ஆகியவற்றைக் கொண்டவனாக இருக்கிறான்; (31) - விஜகர்மாதி பக்தயந்தம் குர்யாத் ப்ரீத்யைவ காரித: உபாயதாம் பரித்யஜ்ய ந்யஸ்யேத்தேவே து தமபீ: - தனது கர்மங்கள் தொடங்கி பக்தியோகம் முடிய உள்ள அனைத்தையும் அவன் மீது கொண்ட அன்பு மூலம் பெறும் ஊக்கத்தால் செய்யவேண்டும். அவற்றை உபாயம் என்று கொள்ளாமல், மற்ற தேவதைகளைக் கண்டு அஞ்சாமல், ஸர்வேச்வரனே உபாயம் என்று எண்ணவேண்டும் – என்றும் கூறியவற்றில் காணப்படும் “ப்ரீத்யைவ காரித: - அவன் மீது கொண்ட அன்பு மூலம் பெறும் ஊக்கத்தால்” என்று கூறியது சாஸ்த்ரங்கள் அவசியம் இல்லை என்னும் எண்ணத்தில் அல்ல. சாஸ்த்ரம் மூலம் மட்டுமே அறியப்படுவதான கைங்கர்யங்களில் ஈடுபடுவதால் எஜமானனாகிய ஸர்வேச்வரனுடைய திருவுள்ளத்தில் பிறக்கும் மகிழ்ச்சி காரணமாக அவனுடைய அடிமையாக உள்ள தனக்கு உண்டாகும் அன்பானது அந்தக் கைங்கர்யங்களை மேன்மேலும் செய்யத் தூண்டுகிறது என்பதை உணர்த்தவே இவ்விதம் கூறப்பட்டது.