Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 43)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

ப்ரபந்நன் சாஸ்த்ரத்திற்கு வசப்பட்டவன் அல்லன் என்பதற்கு மறுப்பு

மூலம் – இவ்விடத்திலே சிலர் “ஸர்வேச்வரன் பக்கலிலே ஸர்வபரந்யாஸாம் பண்ணின விவேகிக்குத் த்யாஜ்ய உபாதேய விபாக நிர்ணாயகம் ஸ்வரூபமஜ்ஞாநமன்றோ? இப்படி இவன் ஸ்வரூப வச்யனாமத்தனை போக்கி, சாஸ்த்ர வச்யனாம்படி என்?” என்று சொல்லுவார்கள். இதுவும் அநுபந்நம்; எங்ஙனே என்னில் – ஸ்வரூபம் இன்னபடி இருக்குமென்று சாஸ்த்ரத்தைக் கொண்டு அறுதியிட்டால் “இஸ் ஸ்வரூபத்துக்கு இன்ன புருஷார்த்தமும் ததுபாயமும் த்யாஜ்யம், இன்ன புருஷார்த்தமும் ததுபாயமும் உபாதேயம்” என்று பிரித்துத் தெளிகைக்கு முக்தனாமளவும் சாஸ்த்ரமொழிய வழியில்லை. ஸ்வரூபத்தில் சேஷத்வாதிகளைக் கொண்டு சில ஔசித்யமாத்ரம் அறியலாமத்தனை அல்லது, “சேஷி உகந்த கைங்கர்யத்தின் ப்ரகாரம் இது. இக் கைங்கர்யத்துக்கு உபாயங்கள் இவை” என்று ஸ்வரூப ஞானம் நியமித்துக் காட்டாது. ஆனபின்பு சாஸ்த்ரத்தை அநாதரித்து நிஷித்த த்ரவ்யங்களைக் கொண்டாதல், விஹிதங்கள் தம்மிலும் ந்யாயார்ஜிதமல்லாத த்ரவ்யங்களைக் கொண்டாதல், தனக்கு ருசித்தபடியே சாஸ்த்ர விருத்தமாயிருக்கும் கட்டளையிலே கைங்கர்யத்தை நடத்தப் பார்த்தால் உபசார அபசாரங்களுக்குப் பிரிவில்லையாம். அப்போது தன் ருசி ஒழிய வேறு நியாமகமில்லாமையாலே முமுக்ஷுக்கள் தவிர்ந்து போருகிற ஸர்வ நிஷித்தங்களையும் தன் ருசிமாத்ரத்தாலே கைங்கர்யமாக அநுஷ்டிக்கப் ப்ரஸங்கிக்கும். ஹவிர் நிவேதனத்திலும் ஸ்ரீபாஷ்யகாரர் “சாஸ்த்ர விருத்தாநி ஸம்ப்ருத்ய” என்று அருளிச்செய்தார். ஆகையால் சாஸ்த்ரவச்யனாய்த் தன் அதிகாரத்துக்குச் சாஸ்த்ரமடைத்த கைங்கர்யங்களையே பண்ணப் ப்ராப்தம்.

– ஒரு சிலர், “ஸர்வேச்வரனிடம் தன்னைக் குறித்த அனைத்துவிதமான பொறுப்புகளையும் ஒப்படைத்த விவேகம் கொண்ட ஒருவனால் விலக்கப்பட வேண்டியது, ஏற்கக்கூடியது ஆகியவற்றைப் பிரித்து உணர்த்துவது அவனுடைய ஸ்வரூப ஞானமே ஆகும் அல்லவோ? ஆகவே அவன் தனது ஸ்வரூப ஞானத்திற்கே கட்டுப்பட்டவன் என்று கூறாமல், சாஸ்த்ரத்திற்குக் கட்டுப்பட்டவன் என்று கூறுவது எப்படிப் பொருந்தும்?”, என்று கேட்கலாம். இந்தக் கேள்வி பொருத்தமற்றதாகும். எப்படி? ஆத்ம ஸ்வரூபம் இத்தன்மை கொண்டது என்று சாஸ்த்ரத்தின் மூலம் அறிந்த பின்னர், “இத்தகைய ஆத்ம ஸ்வரூபத்திற்கு - இந்தப் புருஷார்த்தமும், அதற்கான உபாயமும் கைவிடத்தக்கது; இந்தப் புருஷார்த்தமும், அதற்கான உபாயமும் ஏற்கத்தக்கது” என்று முக்தி பெறும் காலம் முடிய வேறுபடுத்தி அறிந்து கொள்வதற்கு சாஸ்த்ரங்கள் அல்லாமல் வேறு உபாயம் இல்லை. ஆத்ம ஸ்வரூபத்திற்குச் சேரும்விதத்தில் உள்ளதான அடிமைத்தனம் என்பதன் மூலம் அடிமையான சேதநன், “இந்தக் கைங்கர்யத்தால் எஜமானனாகிய ஸர்வேச்ரவனுடைய மகிழ்ச்சியே பலன்” என்பதை மட்டுமே அறிய இயலும் அல்லாமல், “எஜமானனாகிய ஸர்வேச்ரவனை மகிழவைக்கும் கைங்கர்யத்தின் முறை இன்னதாகும், இதற்கான உபாயங்களை இவையாகும்” என்று உணர்த்துவதற்கு ஸ்வரூப ஞானத்தால் இயலாது. ஆகவே சாஸ்த்ரங்களை ஒதுக்கிவிட்டு, சாஸ்த்ரங்களால் விலக்கப்பட்ட பொருள்களைக் கைக்கொள்ளுதல், சாஸ்த்ரங்களால் விதிக்கப்பட்ட பொருள்களைத் தகாத வழியில் கைக்கொள்ளுதல், சாஸ்த்ரங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கைங்கர்யங்களாக உள்ளபோதிலும் தனது விருப்பத்திற்கு ஏற்ப வேறுவிதமாகச் செய்தல் போன்றவை மூலம் உபசாரம் மற்றும் அபசாரம் ஆகியவற்றில் வேறுபாடு காண இயலாமல் போகும். அந்தச் சூழ்நிலையில் தனது விருப்பம் அல்லாமல் வேறு எந்தவிதமான ப்ரமாணமும் இல்லை என்பதால், முமுக்ஷுக்களால் விலக்கப்படும் அனைத்தையும் தனது விருப்பம் என்ற காரணத்தால் கைங்கர்யமாக இயற்றுதல் என்ற நிலை உண்டாகும். எம்பெருமானார் தான் அருளிச்செய்த நித்யத்தில், திருவாராதனம் செய்யும்போது தளிகையை சமர்ப்பிப்பதைக் கூறும் இடத்தில், சாஸ்த்ர விருத்தாநி ஸம்ப்ருத்ய – சாஸ்த்ரங்களுடன் முரண்படாதபடி பொருள்களை ஈட்டி – என்று அருளிச்செய்தார். ஆகவே ப்ரபந்நன் ஒருவன் சாஸ்த்ரங்களுக்குக் கட்டுப்பட்டு, அவை தனது தகுதிக்கு ஏற்ப எத்தகைய கைங்கர்யங்களை விதிக்கின்றனவோ அவற்றைச் செய்தபடி இருத்தலே ஏற்புடையதாகும்.