Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 42)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

பகவத் ஆணையாக இல்லையென்றாலும் ப்ரபந்நன் ஏன் கைங்கர்யம் செய்யவேண்டும்

மூலம் – இப்படியாகில் இவனுக்கு நித்ய நைமித்திகங்களில் அடைக்கவொண்ணாத ப்ரபூத கைங்கர்யங்களுக்குப் ப்ரயோஜகர் ஆர்? என்னில், இவை இவனுக்கு உபாயாந்தரத்திற் புகா; அங்காந்தர நிரபேக்ஷையான ப்ரபத்திக்கு பரிகரங்களுமாகா; அகரணத்தில் ஈச்வரன் வெறுக்குமென்று செய்கிறானுமல்லன்; தனியே இவை தமக்கு ஒரு பாபக்ஷய ஸ்வர்க பசு புத்ராதி பலாந்தரத்தை ஆசைப்பட்டுச் செய்கிறானுமல்லன்; லௌகிகரானவர்கள் த்யூதாதிகள் பண்ணுமாப்போலே கேவலம் தன் உகப்பாலே ப்ரவர்த்திக்கிறானுமல்லன்; முக்தரைப்போலே பகவதபிப்ராயத்தைப் ப்ரத்யக்ஷமாகக் கண்டு அவனை உகப்பிக்கைக்குப் ப்ரவர்த்திக்கிறானுமல்லன்; மற்று எங்ஙனேயென்னில், இக்கைங்கர்யங்களுக்கும் பலாந்த்ரங்கள்போலே பகவத் ப்ரீதியும் பலமாக சாஸ்த்ர ஸித்தமாகையாலே அவனுக்கப்பிலே ஸத்த்வோத்தரனான தன் ப்ரக்ருதி ஸ்வபாவத்தாலே ருசி பிறக்கையாலே ஸுஹ்ருத் புத்ராதி உபலாலநங்களிற் போலே ஸர்வவித பந்துவான அவனுடைய ப்ரீணநங்களிலே சாஸ்த்ரம் கைவிளக்காகப் ப்ரவர்த்திக்கிறான்.

– அப்படியானால் ப்ரபந்நன் ஒருவனுக்கு நித்ய நைமித்திக கர்மங்களில் சேராதபடியும், பகவத் ஆணை என்பது அல்லாமலும் உள்ள கைங்கர்யங்களை செய்யத் தூண்டுவது எது என்ற கேள்வி எழலாம். இத்தகைய கர்மங்கள் இவனுக்கு மோக்ஷத்திற்கான உபாயம் என்பதிலும் சேராது; இப்படிப்பட்ட கர்மங்கள் எதனையும் அங்கமாக எதிர்பாராமல் உள்ள ப்ரபத்திக்கு இவை அங்கமாகவும் இல்லை; இவற்றைச் செய்யவில்லை என்றால் ஸர்வேச்வரன் தன்னை வெறுக்கக்கூடும் என்பதாலும் செய்வதில்லை; இவற்றின் மூலம் தனது பாபங்கள் நீங்குதல், ஸ்வர்க்கம் – பசு – புத்திரன் போன்ற பலன்கள் கிட்டும் என்னும் ஆசையிலும் செய்வதில்லை; உலகில் உள்ளவர்கள் சூதாடுதல் போன்று இவற்றைத் தனது மகிழ்வுக்காகவும் செய்வதில்லை; முக்தர்கள் தங்களுடைய செய்கைகளைப் பகவான் ஏற்றுக்கொண்டு மகிழ்வதை நேரடியாகக் காண்பது போன்று, அவனை மகிழ வைப்பதற்காகவும் செய்வதில்லை. அப்படியென்றால் இது போன்ற கைங்கர்யங்களை எதற்காகச் செய்கிறான்? மற்ற பலன்கள் போன்று இந்தக் கைங்கர்யங்கள் பகவத் ப்ரீதியைப் பலனாகக் கொண்டவை என்று சாஸ்த்ரங்கள் கூறுகின்றன; ஸத்வகுணம் மேலோங்கி நிற்கும் இவனுக்கு இயல்பாகவே ஸர்வேச்வரனுடைய உகப்பு என்பதில் ஆசை ஏற்படுகிறது; ஆகவே சாஸ்த்ரங்களைத் தனக்கு வழிகாட்டும் விளக்காகக் கொண்டு, தனக்கு அனைத்துவிதமான உறவினனாக உள்ள ஸர்வேச்வரனை, தன்னுடைய நண்பர்கள் மற்றும் குழந்தைகள் போன்றவர்களை எவ்விதம் மகிழவைப்பானோ அது போன்றே மகிழும்படிச் செய்வதற்காக இவற்றை இயற்றுகிறான்.