Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 40)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

தர்மங்களைத் துறத்தல் ப்ரபத்திக்கு அங்கம் அல்ல

மூலம் – இத் தர்மங்களுக்கு “ஸஹகாரித்வேந ச” என்ற ஸூத்ரத்திற் சொன்ன வித்யா ஸஹகாரித்வ வேஷம் தவிர்த்தாலும், “விஹிதத்வாச்சாச்ரம கர்மாபி” என்று ஸூத்ராந்தரத்திற் சொன்ன விநியோகாந்தரத்துக்குப் ப்ரபந்நன் பக்கல் நிவாரகரில்லை. ஆகையால் இத்தர்மங்களினுடைய அநுஷ்டாநமும் தர்மங்களைத் த்யஜிக்கையும் ப்ரபத்திக்கு அங்கமல்லாமையால் அசக்யங்களில் நைரச்யம் அதிகாரத்திலே சொருகும். சக்யமான நித்ய நைமித்திகங்களுடைய அநுஷ்டாநம் ஆஜ்ஞாநுபாலனமான கைங்கர்ய மாத்ரமாம்.

– இந்தத் தர்மங்கள், ப்ரஹ்மஸூத்ரம் (3-4-33) - ஸஹகாரித்வேந ச - ப்ரஹ்மவித்யை உண்டாவதற்குக் கர்மங்கள் துணையாக உள்ள காரணத்தினால் அவை இயற்றப்படவேண்டும் – என்பதற்கு ஏற்ப ப்ரஹ்மவித்யைக்கு மட்டுமே அங்கம் என்றும், ப்ரபத்திக்கு அங்கம் அல்ல என்றும் உள்ளன. ஆனால், ப்ரஹ்மஸூத்ரம் (3-4-32) - விஹிதத்வாச்சாச்ரம கர்மாபி – அனைத்து ஆச்ரமங்களிலும் உள்ளவர்களாலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் – என்று வேறு ஒரு ஸூத்ரத்தில் கூறுவதற்கு ஏற்ப, வேறு ஒருவிதமான பயனுக்காக அவற்றை ப்ரபந்நன் இயற்றவேண்டும் என்பதைத் தடுக்கும் ப்ரமாணம் ஏதும் இல்லை. ஆகவே இந்தக் கர்மங்களை இயற்றுதல், இயற்றாமல் கைவிடுதல் ஆகிய இரண்டுமே ப்ரபத்திக்கு அங்கம் அல்ல என்பதால், அவற்றைத் தனது சக்திக்கும் மீறி இயற்றுதல் என்பது ப்ரபத்திக்கான தகுதியை அதிகப்படுத்துவதாகவே அமையும். மேலும் தனது சக்திக்கு உட்பட்டு இயற்றப்படும் நித்ய நைமித்திக கர்மங்கள், பகவத் ஆணைக்கு உட்பட்டுச் செய்யப்படும் கைங்கர்யம் போன்றதே என்றாகிறது.