Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 39)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

“பரித்யஜ்ய” என்னும் த்யாகவிதியின் ஆழ்பொருளும் விளக்கமும்

மூலம் – “இப்படிப் ப்ரதிஷேதிக்கைக்குப் ப்ரஸங்கம் வேணும். இங்கு என்ன தர்மங்கள் ப்ரஸக்தங்களாய்ப் ப்ரதிஷேதிக்கப்படுகின்றன?” என்னில் – வேதாந்த சோதிதைகளான வித்யைகளில் ஒரு வித்யையிலே ஓதி அங்கங்களாய்த் தோற்றின வர்ணாச்ரம தர்மங்களும் கதி சிந்தநாதிகளும் வித்யாந்தரத்திலும் வருமாப்போலே, ந்யாஸ வித்யையிலும் இவை துல்ய ந்யாயதையாலே அங்கங்களாய் வரப்புக இப்படி அங்கத்வ ப்ரஸங்கமுடைய ஸர்வதர்மங்களாலும் இதுக்கு அபேக்ஷையில்லை என்கை இவ்விடத்துக்கு உசிதம்.

– “இவ்விதமாக மறுப்பதற்கு (அல்லது தடுப்பதற்கு) ஏதேனும் தவறாக உரைக்கப்பட்டிருக்கவேண்டும். இங்கு எத்தகைய தர்மங்கள் இவ்விதம் தவறாக உரைக்கப்பட்டதால் அவை மறுக்கப்படுகின்றன?” என்று சிலர் கேட்கலாம். வேதாந்தங்களான உபநிஷத்துகளில் விதிக்கப்படும் பல வித்யைகளில், ஏதேனும் ஒரு வித்யையில் மட்டுமே அங்கங்களாகக் காணப்படுகின்ற சில வர்ணாச்ரம தர்மங்களும், அர்ச்சிராதி கதி குறித்த சிந்தனைகளும், மற்ற வித்யைகளுக்கும் (அவற்றில் கூறப்படவில்லை என்றாலும்) பொருந்தும்; இதே போன்று, ந்யாஸ வித்யையாகிற ப்ரபத்திக்கு இது போன்ற அங்கங்கள் (மேலே கூறப்பட்ட இரண்டு கருத்துக்கள் காண்க) அவசியமானது என்று தோன்றினாலும், இவ்விதம் தவறுதலாக ப்ரபத்தியின் அங்கங்களாக எண்ணப்படும் இவை ப்ரபத்தியால் எதிர்பார்க்கப்படுவதில்லை. இதுவே இங்கு சரியான கருத்தாகும்.