Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 38)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

“பரித்யஜ்ய” என்னும் த்யாகவிதியின் ஆழ்பொருளும் விளக்கமும்

மூலம் – ஆகையால் “இங்கு ஸர்வதர்மங்களினுடைய ஸ்வரூப த்யாகத்தை அங்கமாக விதிக்கிறது” என்றும், “அவை அங்கமாம்படி இங்கு புத்தி விசேஷ த்யாக மாத்ரம் விதிக்கிறது” என்றும் சொல்லுகிற பக்ஷங்கள் ஆஜ்ஞாநுபாலநாதி சாஸ்த்ரங்களுக்கும், ப்ரபத்திக்கு நைரபேக்ஷ்யம் சொல்லுகிற சாஸ்த்ரங்களுக்கும், பூர்வாசார்ய ஸம்ப்ரதாயங்களுக்கும், ப்ரபந்நராய்ப் போந்த பூர்வசிஷ்டர்களுடைய ஆசாரத்துக்கும் விருத்தங்களாம். இப்படி உக்த தோஷங்களாலே தர்மங்களினுடைய ஸ்வரூப த்யாகமும் ப்ரபத்திக்கு அங்கமன்று; உக்த நைரபேக்ஷ்யத்தாலே அந்த தர்மங்களினுடைய ஸ்வரூபமும் இதுக்கு அங்கமன்று. ஆகையால் இங்கு மற்றொரு தர்மத்தாலும் இப் ப்ரபத்திக்கு அபேக்ஷையில்லை என்கையிலே இத் த்யாக விதிக்குத் தாத்பர்யம்.

– ஆகவே “பரித்யஜ்ய என்னும் த்யாக விதியானது, அனைத்து தர்மங்களையும் அதன் ஸ்வரூபத்துடன் கைவிடுதல் என்பதையே ப்ரபத்திக்கு அங்கமாக விதிக்கிறது” என்றும், “பரித்யஜ்ய என்னும் த்யாக விதியானது, அனைத்து தர்மங்களையும், அந்தத் தர்மங்கள் உபாயமாக உள்ளன என்னும் எண்ணத்தைக் கைவிடுதல் என்பதையே ப்ரபத்திக்கு அங்கமாக விதிக்கிறது” என்றும் கூறுகின்ற இரண்டுவிதமான கருத்துக்களும் - கர்மங்களுக்கான கட்டளைகளைக் கூறுகின்ற சாஸ்த்ரங்களுக்கும், ப்ரபத்தியானது மற்ற எதனையும் எதிர்பார்ப்பதில்லை என்று கூறுகின்ற சாஸ்த்ரங்களுக்கும், பூர்வாசார்ய ஸம்ப்ரதாயங்களுக்கும், ப்ரபந்நர்களாகத் திகழும் பூர்வ சிஷ்யர்களுடைய ஒழுக்கங்களுக்கும் முரணாக உள்ளன. இவ்விதம் கூறப்பட்ட தோஷங்கள் காரணமாக தர்மங்களை அவற்றின் ஸ்வரூபத்துடன் துறப்பது என்பது ப்ரபத்திக்கு அங்கம் அல்ல. இதே போன்று, ப்ரபத்தி எந்த ஒன்றையும் செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை என்பதால், தர்மங்களை இயற்றுவதும் ப்ரபத்திக்கு அங்கம் அல்ல. ஆகவே பரித்யஜ்ய என்னும் இந்த த்யாக விதிக்கு, “ப்ரபத்தி வேறு எந்த ஒரு தர்மத்தையும் எதிர்பார்ப்பதில்லை” என்பதே கருத்தாகும்.