Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 36)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

“பரித்யஜ்ய” என்பதற்கு உபாயத்வ புத்தியைத் துறத்தல் என்பதே பொருள் என்பது கண்டிக்கப்படுதல்

மூலம் – இப்படி ஸ்வரூப த்யாகம் கூடாதொழிந்தாலும் உபாயத்வ புத்தி த்யாகம் பண்ணுகை “பரித்யஜ்ய”வுக்குப் பொருளானாலோ என்னில், ப்ரபந்நனுக்கு உத்தர க்ருத்ய கோசரங்களான வாக்யங்களில், உபாயத்வ புத்தி த்யாகம் விதிக்கிறவிடம் உசிதம். இங்கு உத்தர க்ருத்ய பரமன்றிக்கே உபாய விதாயகமாயிருக்கிற இவ்வாக்யத்திற் சொல்லுகையாலே, இப்புத்தி த்யாக பூர்வகமான தர்மஸ்வரூபம் ப்ரபத்திக்கு அங்கமாக அநுஷ்டேயம் என்று பலிக்கையால் “ஸ்வயம்ப்ரயோஜநமான கேவல கைங்கர்யம் உத்தர க்ருத்யம்” என்கிற பதம் ஸித்தியாது. இவ்வுபாயத்துக்குச் சொல்லுகிற தர்மாந்தர நைரபேக்ஷ்யமும் கிடையாது. இவ்வுபாயம் அகிஞ்சநாதிகாரமன்றிக்கே ஒழியும். எங்ஙனேயென்னில் உபாயமல்லாதவற்றில் உபாயத்வ புத்தி த்யாகம் இங்கு விதிக்கவேண்டா. உபாயமானவற்றில் உபாயத்வ புத்தி த்யாகம் பண்ணி அநுஷ்டிக்கையாவது பழைய உபாஸநாதிகளில் நிலையாம். இங்கு உபாயத்வ புத்தி த்யாகம் பொருளாகச் சொல்லுகிற பக்ஷத்தில் த்யாக விதிக்கும் அநுஷ்டாந விதிக்கும் அதிகாரி பேதத்தாலே விரோதம் பரிஹரித்தவிடமும் அநபேக்ஷித வசநம். இங்கு ஸ்வரூப த்யாகம் சொல்லும்போதிறே இவ் விரோத ப்ரஸங்கமுள்ளது? இப்படி புத்தி விசேஷ த்யாக பூர்வக கர்ம ஜ்ஞாந பக்திகளைப் ப்ரபத்திக்கு அங்கமாக இசையும் பக்ஷத்தில், உபாஸந ப்ரபதநங்களுக்கு அங்காங்கி வ்யபதேசத்தில் மாறாட்டமேயுள்ளது. அங்க பாவத்தில் யதாகதஞ்சித் அநுஷ்டாநம் அமையுமென்கிற வைஷம்யமும் பந்தம். “ஸகலாங்கோப ஸம்ஹாரே காம்ய கர்ம ப்ரஸித்யதி” என்று சொல்லப்பட்டதிறே.

– ஒரு சிலர், “பரித்யஜ்ய என்பதன் மூலம் தர்மங்களை முழுவதுமாகக் கைவிடாமல், அவற்றை உபாயமாக எண்ணும் சிந்தனையை மட்டுமே கைவிடுதல் என்று கூறப்படுவதாகக் கொள்ளலாம் அல்லவோ?”, என்று கேட்கலாம். ப்ரபந்நன் ஒருவனுக்கு ப்ரபத்திக்குப் பின்னர் செய்யவேண்டியவற்றைக் கூறும் வாக்கியங்களில் இது போன்று அவற்றை உபாயமாக எண்ணும் சிந்தனையை மட்டுமே கைவிடுதல் என்று விதிக்கப்பட்டுள்ளது சரியே ஆகும். ஆனால் இந்த சரமச்லோகம் என்பது ப்ரபத்திக்கு முன்பாக உள்ள உபாயத்தைக் கூறுவதாக உள்ளது, ப்ரபத்திக்குப் பின்னர் செய்யவேண்டியவற்றை விதிக்கவில்லை. ஆகவே பரித்யஜ்ய என்பதற்கு இவ்விதம் பொருள் கொண்டால், இந்தத் தர்மங்களை ப்ரபத்தியின் அங்கமாகவே கொண்டு அவற்றைக் கைக்கொள்ளவேண்டும் என்றும், ஆனால் அவை உபாயம் அல்ல என்னும் சிந்தனையுடன் இருத்தல்வேண்டும் என்றும் கூறுவதாகிறது. இதனை ஒப்புக்கொண்டால், ப்ரபத்திக்குப் பின்னர் செய்யப்படும் சில செயல்கள் எந்தவிதமான பலனையும் எதிர்பாராமலும், அந்தச் செயல்களைச் செய்யவேண்டும் என்னும் ஒரு கட்டாயத்திற்காகவும், பகவானுக்குச் செய்யப்படும் கைங்கர்யம் என்னும் எண்ணத்துடனும் செய்தல் வேண்டும் என்னும் விதியானது பொருந்தாமல் போகும். மேலும் ப்ரபத்திக்கு இன்றியமையாத அங்கங்கள் என்று ஏதும் இல்லாமலும் போகும். இதன் விளைவாக மற்ற உபாயங்கள் ஏதும் இன்றி உள்ள ஒருவர் கைக்கொள்ளக்கூடிய உபாயமே இந்த ப்ரபத்தி என்னும் நிலை மறைந்துவிடும் (அல்லது மற்ற உபாயங்கள் இல்லாமல் உள்ளதே இதற்கான தகுதி என்பது இல்லாமல் போகும்); எப்படியென்றால் – உபாயங்களாக அல்லாத தர்மங்களை உபாயங்களாக எண்ணி, அவற்றை உபாயம் அல்ல என்று துறத்தலை பரித்யஜ்ய என்பதால் விதிப்பதாகிறது என்று கூறுதல் அவசியம் அற்றதாகும். உபாயமாக உள்ள தர்மங்களை உபாயமாகச் சிந்தையில் வைக்காமல் இயற்றுதல் என்பது பழைய உபாஸனை போன்றதே ஆகும். மேலும் “பரித்யஜ்ய” என்பதற்கு தர்மங்களை உபாயங்களாக எண்ணுவதைக் கைவிடுதல் என்று கொண்டால், கைவிடுதல் என்னும் விதி மற்றும் கைக்கொள்ளும் என்னும் விதி ஆகியவை அந்தந்த அதிகாரியைப் பொறுத்தே அமையும் என்று சமாதானம் கூறுவது அவசியம் அற்றதாகிறது. “பரித்யஜ்ய” என்பதற்கு, தர்மங்களை அடியுடன் கைவிடுதல் என்று கூறினால் மட்டுமே இவ்விதம் பிரிப்பது பொருந்துகிறது? கர்மம், ஞானம் மற்றும் பக்தி ஆகியவற்றை, அவை உபாயங்கள் என்று எண்ணாமல் கைக்கொள்ளவேண்டும் என்ற நிலை ப்ரபத்திக்கான அங்கம் என்று கொண்டால், பக்தனுக்கும் ப்ரபந்நனுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும். மேலும் அங்கமாக உள்ள ஒரு செயல்பாட்டைப் பொறுத்தவரையில், அதனைப் பரிபூர்ணமாகச் செய்தல்வேண்டும் என்னும் அவசியம் இல்லை என்றும், தனது சக்திக்கு ஏற்ப அவற்றை இயற்றினால் போதுமானது என்றும் கூறுவதும் சரியல்ல. பூர்வமீமாம்ஸையில் - ஸகலாங்கோப ஸம்ஹாரே காம்ய கர்ம ப்ரஸித்யதி – ஒரு பலனுக்காகச் செய்யப்படும் செயலானது அனைத்து அங்கங்களுடன் செய்தால் மட்டுமே பலன் அளிக்கும் – என்று கூறப்பட்டது அல்லவோ?