Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 34)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
இரண்டு முக்கிய ச்லோகங்களுக்கான விளக்கம்
மூலம் – இப்படியாகையால் உபாயாந்தரத்தில் அஜ்ஞராய் இவ்வுபாயத்தில் ஸமுதாய ஜ்ஞாநமாத்ரமுடையராயிருப்பார்க்கும், இதிலும் உபாயாந்தரத்திலும் தெளிவுண்டானாலும் உபாயாந்தரத்தில் அநுஷ்டாந சக்தியில்லாதார்க்கும், இவையிரண்டும் உண்டானாலும் விளம்பம் பொறாத ஆர்த்யதிசயமுடையார்க்கும் ப்ரபத்தியிலே இழியலாம். இவ்விளம்ப க்ஷமனும் தான் நினைத்த காலத்திலே பலம் பெறுகைக்கு உபாயாந்தர ரஹிதன். இப் ப்ரகாரத்தை நினைத்து “ஜகதி கதிம் அந்யாம் அவிதுஷாம்” என்கிறது.
– ஆக மற்ற உபாயங்களைக் குறித்து அறியாதவர்களாக ப்ரபத்தியைக் குறித்து மட்டுமே நன்கு அறிந்தவர்களாக உள்ளவர்கள், ப்ரபத்தி மற்றும் மற்ற உபாயங்கள் ஆகிய இரண்டிலும் ஞானம் உள்ளவர்கள் என்றாலும் மற்ற உபாயங்களைக் கைக்கொள்ளும் சக்தி அற்றவர்களாக உள்ளவர்கள், இந்த இரண்டைக் குறித்தும் ஞானம் மற்றும் சக்தி ஆகிய இரண்டையும் கொண்டவர்களாக இருந்தாலும் இவற்றால் ஏற்படவல்ல பலன் காலதாமதமாக உண்டாவதைப் பொறுத்துக் கொள்ள இயலாதவர்கள் ஆகியோர் ப்ரபத்தியைக் கைக்கொள்ளலாம். இவ்விதம் காலதாமதத்தைப் பொறுத்துக்கொள்ள இயலாமல் உள்ளவன், தான் நினைத்த காலத்தில் பலன் அடைவதற்கான உபாயங்களைக் கைக்கொள்ள இயலாதவனே ஆகிறான். இதனைக் கருத்தில் கொண்டே ஸ்வாமி பராசரபட்டர் - ஜகதி கதிம் அந்யாம் அவிதுஷாம் – இந்த உலகத்தில் வேறு உபாயங்களை அறியாதவன் – என்றார்.