Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 32)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

இரண்டு முக்கிய ச்லோகங்களுக்கான விளக்கம்

மூலம் – உபாயாந்தரத்தில் தனக்கு ஜ்ஞாநமுண்டாய், அதில் அநுஷ்டாந சக்தியுமுண்டானாலும், விளம்ப க்ஷமனன்றிக்கே இருக்குமாகில் கடுக பலம் தரவல்ல ப்ரபத்தியே நமக்கு உசிதை யென்றிருக்குமவனும் இப் ப்ரபத்திக்கு அதிகாரியாம். இத்தை “இதம் திதீர்ஷதாம் பாரம்” இத்யாதிகளிலே சொல்லுகிறது. எங்ஙனேயென்னில், “திதீர்ஷதாம் பாரம்” என்றது கடுக அநிஷ்ட நிவ்ருத்தி பிறக்க வேணுமென்னும் த்வரையுடையார்க்கு என்றபடி. “ஆநந்த்யம் இச்சதாம்” என்றது ஸ்வரூப ப்ராப்ய பரிபூர்ண பகவத் அநுபவத்தைப் பெற்றல்லது தரிக்கமாட்டார்க்கு என்றபடி.

– ஒருவனுக்கு மற்ற உபாயங்களில் ஞானம் கொண்டவனாக, அவற்றைக் கைக்கொள்ள அவன் சக்தி உள்ளவனாக இருந்தாலும், அவற்றின் மூலம் பலன் கிடைக்கும் காலதாமதத்தைத் பொறுத்துக் கொள்ள இயலாமல், விரைந்து பலன் தரவல்ல ப்ரபத்தியே தனக்கு ஏற்றது என்று எண்ணினால், அவன் ப்ரபத்திக்குத் தகுதியானவன் ஆகிறான். இதனையே மேலே உள்ள லக்ஷ்மீ தந்த்ரம் (17-101) – இதம் திதீர்ஷதாம் பாரம் – ஸம்ஸாரம் என்னும் பெருங்கடலின் அக்கரையை அடைய எண்ணுபவர்களுக்கு இதுவே உபாயம் – என்று கூறியது. எப்படியென்றால், “திதீர்ஷதாம் பாரம்” என்பதால், தங்களுக்கு விருப்பம் அல்லாதவை (ஸம்ஸாரம்) விரைந்து நீங்கவேண்டும் என்னும் வேகம் கொண்டவர்களுக்கு என்னும் கருத்து கூறப்படுகிறது. லக்ஷ்மீ தந்த்ரம் (17-101) – ஆநந்த்யம் இச்சதாம் – என்பது தங்களுடைய ஆத்மஸ்வரூபத்திற்கு ஏற்ற இலக்காக உள்ளதான பரிபூர்ணமான பகவத் அனுபவம் கிட்டினால் அல்லாமல், உயிர் தாங்க மாட்டார்கள் என்பதைக் கூறுவதாகும்.