Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 31)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
இரண்டு முக்கிய ச்லோகங்களுக்கான விளக்கம்
மூலம் – இவற்றில் “விஜாநதாம்” என்றும், “தேவே பரிவ்ருடதயா வா விதிதயா” என்றும் சொன்ன ஜ்ஞாந விசேஷமும் உபாஸனாதிகளில் தெளிவாதல், ப்ரபத்திக்கு உபயுக்தமான சரண்யகுணாதி விஷயத்தில் தெளிவாதலாமித்தனை அல்லது இதுக்கு அநபேக்ஷிதமான ஸர்வவிஷய ஜ்ஞாநமன்று. பரிவ்ருடத்வ ரூபமான சரண்யகுண விசேஷ ஞாநமிறே இங்கு சொல்லப்படுகிறது. இவ் உபயுக்த ஞாநமுண்டானாலும், உபாயாந்தரத்தில் சக்தியில்லாதபோது அகிஞ்சநனாய் ப்ரபத்திக்கு அதிகாரியாம். சக்தியுண்டேயாகிலும், “சரைஸ்து ஸங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலார்தந: | மாம் நயேத்யதி காகுத்ஸ்த: தத்தஸ்ய ஸத்ருசம் பவேத்” என்கிறபடியே ரக்ஷகன் கைபார்த்து தான் கைவாங்கியிருக்கை யன்றோ உசிதமென்னில், இது ப்ரபந்நனுடைய உத்தர க்ருத்ய விசேஷத்துக்கு உதாஹரணமாம். அல்லாதபோது உபாயவிதாயக சாஸ்த்ரங்கள் நிரர்த்தங்களாம்.
– மேலே உள்ள ச்லோகங்களில் காணப்படும் “விஜாநதாம் = யார் அறிந்தவரோ” மற்றும் “தேவே பரிவ்ருடதயா வா விதிதயா = அனைவரைக் காட்டிலும் உயர்ந்தவன் என்னும் ஞானம்” என்னும் இரண்டின் மூலமும் உபாஸனையைக் குறித்து நன்றாக அறிந்த ஞானம் அல்லது தான் சரணம் அடையத்தகுந்த ஸர்வேச்வரனுடைய திருக்கல்யாண குணங்கள் குறித்த ஞானம் என்பது மட்டுமே கூறப்படுகிறது; இவை அல்லாமல், ப்ரபத்திக்குத் தேவையற்றதான அனைத்துவிஷயங்களைக் குறித்த ஞானம் அல்ல; காரணம் இங்கு சரணம் புகத்தக்கவனுடைய “அனைவரைக் காட்டிலும் உயர்ந்தவன்” என்னும் ஞானமே கூறப்படுகிறது. உபாஸனத்தைக் குறித்த ஞானம் இருந்தாலும், அத்தகைய உபாஸனையைக் கைக்கொள்ள இயலவில்லை என்றால், அவன் மற்ற உபாயங்களைக் கைக்கொள்ளும் சக்தியற்றவன் என்றாகி, ப்ரபத்திக்குத் தகுதியாவன் ஆகிறான். ஆனால் ஒருவனுக்கு அத்தகைய சக்தி இருந்தாலும், சீதை, இராமாயணம் ஸுந்தரகாண்டத்தில் (39-30) - சரைஸ்து ஸங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலார்த்தந: மாம் நயேத்யாதி காகுத்ஸ்த: தத்தஸ்ய ஸத்ருசம் பவேத் – விரோதியின் வலிமையை அழிக்கவல்ல இராமன், இலங்கையைத் தனது அம்புகளால் நிரப்பி, அதன் பின்னரே என்னை அழைத்துச் செல்லவேண்டும். இதுவே அவனுக்குப் பெருமை ஆகும் – என்று கூறுவதற்கு ஏற்ப, ஸர்வேச்வரன் தன்னைக் காப்பாற்றும் தருணத்திற்குக் காத்திருந்து, மற்ற உபாயங்களில் ஈடுபடாமல் இருப்பது அல்லவோ உசிதமாகும் என்று சிலர் கேட்கலாம். சீதையின் கருத்தானது, ப்ரபத்திக்குப் பின்னர் ப்ரபந்நன் இருக்கவேண்டிய நிலைக்கு உதாரணம் ஆகும். இவ்விதம் கொள்ளவில்லை என்றால், உபாயங்களைக் கைக்கொள்ளவேண்டும் என்று கூறுகின்ற சாஸ்த்ரங்கள் அனைத்தும் பொருளற்றவை ஆகிவிடும்.