Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 25)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
தங்களுடைய வர்ணாச்ரம தர்மங்களைத் துறக்கவேண்டும் என்பதற்கான கண்டனம்
மூலம் – பூர்வாசார்யர்களும் இவ்விடத்தில் ஸர்வதர்ம ஸ்வரூப த்யாகம் ப்ரபத்த்யங்க மென்றும், இப்படியன்றென்றும் விவாதமும் பண்ணினார்களல்லர். ப்ரபத்திக்கு அதிகாரமான ஆகிஞ்சந்யமும், ப்ரபத்தியினுடைய நைரபேக்ஷ்யமும் இச் சரமச்லோகத்தில் எந்தப் பதங்களிலே விவக்ஷிக்கை உசிதமென்று விமர்சித்தார்களத்தனை.
– பூர்வாசார்யர்கள் கூட, அனைத்து தர்மங்களையும் அவற்றின் ஸ்வரூபத்துடன் கைவிடுதல் என்பது ப்ரபத்தியின் அங்கமா இல்லையா என்று விவாதம் செய்யவில்லை. அவர்களுடைய ஆராய்ச்சி முழுவதும் சரமச்லோகத்தின் எந்தப் பதங்கள் மூலம், ப்ரபத்திக்குத் தகுதியாக உள்ளதான “மற்ற உபாயங்களைக் கைக்கொள்ள இயலாமை (ஆகிஞ்சந்யம்)” மற்றும் ப்ரபத்திக்கு எந்தவிதமான அங்கங்களும் அவசியம் இல்லை ஆகியவை உணர்த்தப்படுகின்றன என்பதிலேயே காணப்படுகிறது.