Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 24)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

தங்களுடைய வர்ணாச்ரம தர்மங்களைத் துறக்கவேண்டும் என்பதற்கான கண்டனம்

மூலம் – ஆகையால் உபாஸநத்தில் வரும் கர்மாத்யங்களாலே நிரபேக்ஷையாயிருக்கிற ப்ரபத்திக்கு அங்கமாக ஒரு தர்மத்தையும் பற்றவேண்டாவென்கையே த்யாகவிதி பக்ஷத்துக்கு உசிதம். இந்தத் த்யாகவிதியான பக்ஷந்தன்னிலும் உபாயாந்தர ஸாமர்த்யமில்லார்க்கும், அது உண்டாகிலும் விளம்ப க்ஷமரல்லாதார்க்கும், இப் ப்ரபத்தியில் அதிகாரம். இப்படியானால் ஒரு ப்ரமாணத்துக்கும் விரோதமில்லை.

– ஆகவே உபாஸனைக்குத் தேவையான அங்கமாக உள்ள அந்தவிதமான தர்மத்தையும் ப்ரபத்திக்கு அங்கமாகக் கைக்கொள்ளவேண்டியதில்லை (அல்லது அதனை ப்ரபத்தி எதிர்நோக்குவதில்லை) என்பதே, அனைத்தையும் கைவிடவேண்டும் என்னும் விதியால் (இதுவே த்யாகவிதி பக்ஷம் எனப்படுகிறது) கூறப்படுவதாகும். “பரித்யஜ்ய” என்பதன் மூலம், “இப்படியாக உள்ள விதியிலும் கூட, மற்ற உபாயங்களில் ஈடுபட சக்தி அற்றவர்களுக்கும் மற்றும் அத்தகைய சக்தி உள்ளபோதிலும் கிட்டக்கூடிய பலனில் ஏற்படும் தாமத்தத்தைப் பொறுக்க இயலாதவர்களுக்கும் இந்த ப்ரபத்தியியைக் கைக்கொள்ளத் தகுதி உள்ளது” என்று கூறப்படுவதாகக் கொள்ளலாம். இவ்விதம் கொண்டால் எந்தவிதமான ப்ரமாணங்களுக்கும் முரண்பாடு உண்டாகாது.