Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 23)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

தங்களுடைய வர்ணாச்ரம தர்மங்களைத் துறக்கவேண்டும் என்பதற்கான கண்டனம்

மூலம் – “யாவஜ்ஜீவம் ஸர்வதர்ம த்யாகம் விதேயமாகிலன்றோ இவ்விரோதமுள்ளது? ப்ரபத்த்யநுஷ்டாந க்ஷணத்தில், ஸர்வதர்மங்களினுடைய ஸ்வரூப த்யாகம் அங்கமானால் விரோதமில்லையே” என்னில், அப்போது ஸம்பாவிதமல்லாதவற்றினுடைய ஸ்வரூப த்யாகம் விதிக்கவேண்டா; ஸம்பாவிதமானவற்றினுடைய ஸ்வரூப த்யாகம் விதேயமாகில், அப்போது உண்டான பகவத் க்ஷேத்ரவாஸ சிகா யஜ்ஞோபவீத ஊர்த்வ புண்ட்ரதாரணாதிகளைத் தவிர்ந்து கொண்டு ப்ரபத்தி பண்ணப் ப்ரஸங்கிக்கும்.

– ஒரு சிலர், “மேலே கூறப்பட்ட மறுப்பானது, ப்ரபந்நன் ஒருவன் தனது வாழ்க்கை முழுவதும் அனைத்து தர்மங்களையும் துறக்கவேண்டும் என்று கூறினால் மட்டுமே பொருந்தும். மாறாக, ப்ரபத்தி நேரத்தில், அதன் அங்கமாக, அனைத்து தர்மங்களையும் அவற்றின் ஸ்வரூபத்துடன் துறந்து, ப்ரபத்திக்குப் பின்னர் அவற்றை மீண்டும் கைக்கொள்ளலாம் என்று கூறினால், அந்த மறுப்பு பொருந்தாது”, எனலாம். இதற்கு சமாதானம் உரைப்போம் - அனைத்து நேரங்களிலும் கைக்கொள்ளப்படாத ஒரு செயலைத் துறக்கவேண்டும் என்று விதிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ப்ரபத்தி நேரத்தில் இயற்றப்படுகின்ற தர்மங்களை மட்டுமே அவற்றின் ஸ்வரூபத்துடன் துறக்கவேண்டும் என்றால் ப்ரபத்தியானது, “பகவான் உகப்புடன் வசிக்கும் திவ்யதேசத்தில் நாமும் வசித்தல், சிகை வைத்துக் கொள்ளுதல், யஜ்ஞோபவீதம் தரித்தல், திருமண்காப்பு அணிதல்” போன்ற பலவற்றையும் துறந்த பின்னரே கைக்கொள்ளப்பட வேண்டும் என்றாகிறது அல்லவோ?