Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 22)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

தங்களுடைய வர்ணாச்ரம தர்மங்களைத் துறக்கவேண்டும் என்பதற்கான கண்டனம்

மூலம் – இவ் விதிபலத்தாலே ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபங்களான ஸர்வதர்மங்களையும் தவிர்ந்து திரிகைதானே ப்ரபந்நனுக்கு சாஸ்த்ரார்த்தமானாலோவென்னில், ப்ரபந்நரான பூர்வர்களும் இப்போதுள்ளாரும், ஸாவதாநமாய்ப் பண்ணிப் போகிற கைங்கர்யங்களும், அபசார பரிஹாரங்களும் விருத்தாநுஷ்டமாம். யதா ப்ரமாணம் ப்ரபத்தி ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகராய்ப் பரமகாருணிகருமா யிருக்கிறவர்களுக்கு, ப்ரம விப்ரலம்ப ஸம்பாவனையுமில்லை.

– ஒரு சிலர் “பரித்யஜ்ய” என்பதன் மூலம் விதிக்கப்படும் கட்டளையின் வலிமை காரணமாக, செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை ஆகிய அனைத்து தர்மங்களையும் கைவிட்டு இருப்பதே ப்ரபந்நன் செய்யவேண்டியது என்று சாஸ்த்ரங்கள் கூறுவதாக உரைக்கிறார்கள். இவ்விதம் கொண்டால், ப்ரபந்நர்களாக இதுவரை இருந்துள்ள பூர்வர்கள் மற்றும் இப்போது உள்ளவர்கள் ஆகிய அனைவரும் செய்கின்ற கைங்கர்யங்கள் மற்றும் தங்களுடைய அபராதங்களுக்கான ப்ராயச்சித்தங்கள் ஆகிய அனைத்துமே சாஸ்த்ரங்களுக்கு விரோதமானவை என்றாகிவிடும். ப்ரபத்தியைத் தகுந்த ப்ரமாணங்களின் அடிப்படையில் வழிவழியாகக் கைகொண்டபடி உள்ளவர்களுக்கும், மிகுந்த கருணை கொண்டவர்களுக்கும் எந்தவிதமான அறியாமையோ அல்லது மற்றவர்களை வஞ்சிக்கும் தன்மையோ இல்லை என்று அறியவேண்டும்.