Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 19)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

“பரித்யஜ்ய” என்னும் பதத்திற்கு மற்றவர்கள் கூறும் பொருள்களுக்கு மறுப்பு

மூலம் – ப்ரபந்நராய் வைத்து லோகஸங்க்ரஹார்த்தமாக உபாஸநாதிகளை அநுஷ்ட்டித்தார்களென்கைக்கும் அவ்வோ ப்ரபந்தங்களில் ஒரு வசநமில்லை. அப்படிக் கல்பிக்கப்புக்காலும், தன் அதிகாரத்துக்கு நிஷித்தமானவற்றை லோகஸங்க்ரஹார்த்தமாக அநுஷ்ட்டிக்கப்புக்கால், அவை இவன் தனக்கும் பாபமாய் அதிகாரத்துக்கு விருத்தாநுஷ்ட்டாநம் பண்ணுகையாலே தன் அநுஷ்ட்டாநத்தையிட்டு லோகஸங்க்ரஹார்த்தம் பண்ணவும் கடப்படாதொழியும். தனக்கு இரண்டு வழிகள் சாஸ்த்ர அநுமதங்களானால், அவற்றில் லோகத்தார்க்குச் சக்யமாய் அவர்களுக்கு ஹிதமாயிருப்பதொன்றைத் தான் அநுஷ்ட்டித்துக் காட்டி, லோகத்தாரை அதிலே நிலை நிறுத்துகையே லோகஸங்க்ரஹமென்று ஸ்ரீகீதாபாஷ்யத்திலேயருளிச் செய்தார். அல்லது ஸந்யாஸிக்கு நிஷித்தமான க்ருஹஸ்தைகாந்த தர்மத்தை, ஸந்யாஸி அநுஷ்ட்டித்துக் காட்டுமது லோகஸங்க்ரஹார்த்தமாகாது; இது ஆஜ்ஞாநாதிலங்கநமாமத்தனை. இப்படியே ப்ரபத்யதிகாரிக்கு நிஷித்தத்தை, அவன்தானே கைங்கர்ய புத்தியாலே அநுஷ்ட்டிக்கையும் ஸ்வாதிகார விருத்தம். ப்ரபத்திக்கு அநபேக்ஷிதங்களான சாஸ்த்ரீயங்களைக் கைங்கர்ய புத்தியாலே அநுஷ்ட்டிப்பார்க்கு விரோதமில்லை.

– மேலும் அவர்கள் ப்ரபந்நர்களாக தங்களுடைய வாழ்வில் இருந்தபோதிலும், லோகஸங்க்ரஹமாக (அனைத்து யோகங்களிலும் உயர்ந்த நிலையில் உள்ள ஒருவன் தன்னுடைய நிலைக்கு ஏற்றபடியான உயர்ந்தவற்றையே கைக்கொள்ளவேண்டும். ஆனால் தன்னைக் காட்டிலும் யோகம் போன்றவற்றில் தாழ்ந்தவர்களாக உள்ளவர்கள், தன்னைப் பின்பற்றி அத்தகைய உயர்ந்தவற்றைச் செய்ய முயன்றால், அவர்களால் இயலாமல் அழிந்துவிடுவார்கள் என்பதற்காக, அவர்கள் நிலைக்குத் தாழ்ந்து அவர்களுக்கு ஏற்றபடியான கர்மங்களைக் கைக்கொள்ளுதலே லோகஸங்க்ரஹமாகும். இதனைக் கீதை 3-20ல் காண்க) இருப்பதற்காக உபாஸனத்தில் நின்றனர் என்று கூறுவதற்கும் எந்தவிதமான ப்ரமாணமும் இல்லை. அது போன்று அவர்கள் செய்தார்கள் என்று வைத்துக்கொண்டால், ஒருவன் தனக்கு சாஸ்த்ரங்களால் விலக்கப்பட்டவற்றை உலகிற்கு உதாரணம் காண்பிப்பதற்காகக் கைக்கொண்டாலும், அது அவனுடைய நிலைக்கு விரோதமாகவும் பாபங்களை உண்டாக்குவதாகவும் உள்ளதால், அவனால் உலகிற்குச் சரியான உதாரணமாக இருக்கமுடியாமல் போய்விடும். கீதாபாஷ்யத்தில் (3-20) ஸ்வாமி எம்பெருமானார் லோகஸங்க்ரஹத்திற்கு இரண்டு வழிகள் சாஸ்த்ரங்களால் கூறப்பட்டன என்றால், அவற்றில் உலகத்தாருக்கு எது மிகவும் எளிமையாகவும் நன்மை அளிப்பதாகவும் உள்ளதோ, அதனை ஒருவன் தனது வாழ்க்கையில் கைக்கொண்டு, அதில் அவர்களை நிலைநிறுத்துவதே லோகஸங்க்ரஹகம் என்று காண்பித்தார். ஸந்யாஸி ஒருவன், தனக்கு விலக்கப்பட்டதாகவும் க்ருஹஸ்தனால் மட்டுமே கைக்கொள்ளக் கூடியதாகவும் உள்ள தர்மங்களை, கைக்கொண்டால் அது லோகஸங்க்ரஹம் ஆகாது; இது பகவானின் ஆணையை மீறும் செயலாகும். இது போன்று, ப்ரபந்நன் ஒருவன் தனக்கு விலக்கப்பட்ட ஒரு செயலை, அது கைங்கர்யம் ஆகும் என்று தவறாக எண்ணிச் செய்தாலும், அவனுடைய அதிகாரத்திற்கு அது முரணே ஆகும். ஆனால் ப்ரபந்நன் ஒருவன் சாஸ்த்ரங்களால் ஏற்கப்பட்டதும், ப்ரபத்திக்கு அவசியம் இல்லாததும் ஆகிய செயல்களை, அவை கைங்கர்யம் என்று கொண்டு இயற்றினால், அதனால் தவறில்லை.