Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 18)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
“பரித்யஜ்ய” என்னும் பதத்திற்கு மற்றவர்கள் கூறும் பொருள்களுக்கு மறுப்பு
மூலம் – “ஜ்ஞாபூர்த்தியாதல் விச்வாஸ பூர்த்தியாதலுடையவன் ப்ரபத்திக்கு அதிகாரி; ஜ்ஞாந மாந்த்யமாதல் விஸ்வாஸ மாந்த்யமாதலுடையவன் உபாஸநாதிகளுக்கு அதிகாரி” என்றால், இச் சரமச்லோகாதிகளுக்கு உபதேஷ்டாக்களுமாய்ப் பரமாஸ்திகரு மாகையாலே பூர்ண ஜ்ஞாந விச்வாஸரான வ்யாஸாதிகளுக்கு உபாஸநாதிகளில் அதிகாரமில்லையாம். அவர்கள் உபதேச காலத்திலே ஜ்ஞாந விச்வாஸங்களுடையராகப் பின்பு கலங்கி உபாஸகரானார்களென்கைக்கு ஒரு ப்ரமாணமில்லை.
– ஒரு சிலர், “முழுமையான ஞானம் கொண்டவனும், பரிபூர்ணமான விச்வாஸம் கொண்டவனும் மட்டுமே ப்ரபத்திக்குத் தகுதியானவன்; ஞானம் முழுமை அடையாதவனும், விச்வாஸம் முழுமை அடையாதவனும் மட்டுமே உபாஸனை செய்வதற்குத் தகுதியானவன்” என்னும் பிழையான கருத்தைக் கொண்டுள்ளனர். இவ்விதம் கொண்டால், சரமச்லோகத்தை வெளிப்படுத்தியவர்களும், உயர்ந்த ஆஸ்திகர்களும், பரிபூர்ணமான ஞானம் கொண்டவர்களும், முழுமையான விச்வாஸம் நிறைந்தவர்களும் ஆகிய வ்யாஸர் போன்றவர்கள் உபாஸனை செய்யும் தகுதி அற்றவர்கள் என்றாகிவிடும். அவர்கள் உபதேசம் செய்யும்போது முழுமையான ஞானம் மற்றும் பரிபூர்ணமான விச்வாஸம் கொண்டவர்களாக இருந்து, பின்னர் அவற்றை இழந்து உபாஸகர்கள் ஆனார்கள் என்பதற்கு எந்தவிதமான ப்ரமாணமும் இல்லை.