Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 17)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
“பரித்யஜ்ய” என்னும் பதத்திற்கு மற்றவர்கள் கூறும் பொருள்களுக்கு மறுப்பு
மூலம் – பலத்தில் வைஷம்யமின்றிக்கே அதிகாரியும் ஏகனாயிருக்க “குரு – லகு” விகல்பமும் சொல்லவொண்ணாது. குரூபாயத்திலே சக்தனானவனுக்கே அதின் த்யாக விசிஷ்டமான லகூபாயத்தை விதித்தால், குரூபாயத்தில் ஒருத்தரும் ப்ரவர்த்திப்பா ரில்லாமையாலும், வேறொரு முகத்தாலே அதிகாரபேதம் சொல்ல வொண்ணாமையாலும், குரூபாயத்தை விதிக்கிற சாஸ்த்ரங்களெல்லாம் ப்ரமாணமன்றிக்கே யொழியும். லகூபாய ப்ரோசநார்த்தமாக குரூபாயத்தை விதித்து, அது தன்னையே நிஷேதிக்கிறதென்கையும் அத்யந்த அநுசிதம். அநுபாயங்களை உபாயங்களாக விதிக்கிறதென்றால், ச்ருதி ஸ்ம்ருதிகள் மோஹந சாஸ்த்ரங்களாகப் ப்ரஸங்கிக்கையாலே, சரண்ய ஸ்வரூபாதிகளும் ஸித்தியாதபடியாம். குருக்களான க்ருஷ்யாதி வ்யாபாரங்களும், லகுக்களான ரத்நவாணி ஜ்யாதிகளும் அர்த்தார்த்திகள் பக்கல் விகல்பிக்கிறதுவும், அதிகாரி விசேஷ வ்யவஸ்தையாலே என்னுமிடம் லோகப்ரஸித்தம். ஆழ்வானுடைய சரமச்லோக வ்யாக்யானத்திலும் இவ்வளவே விவக்ஷிதமாகையால், ஒரு விரோதமுமில்லை. ஸமாவர்த்தநாதிகளில் குரு லகு விகல்பமும் அவஸ்தா விசேஷங்களாலே நியதமென்று கொள்ளாதபோது, குருவிதாந வையர்த்தமும் வரும்.
– ஓரு அதிகாரி தர்மங்களை இயற்றும் சக்தி கொண்டவனாக உள்ளபோது, அடையும் பலன்களின் எந்தவிதமான வேறுபாடுகளும் இல்லாதபோது, கடினமானது – சுலபமானது (குரு – லகு) என்று இரண்டுவிதமான உபாயங்களில் ஏதேனும் ஒன்றைக் கைக்கொள்ளலாம் என்று கூறுவதாக இருத்தல் ஆகாது. ஏன்? கடினமாக உபாயத்தைக் கைக்கொள்ளும் சக்தி கொண்ட ஒருவனுக்கு, அதனைத் துறந்து சுலபமான உபாயத்தைக் கைக்கொள்ளும்படிக் கூறினால், அதன் பின்னர் யாரும் கடினமான உபாயத்தைக் கைகொள்ள யாரும் முயலமாட்டார்கள்; மேலும், வேறு எந்தவிதமான வழியாலும் அதிகாரிகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை உரைக்க இயலாமல் போகும்; இந்தக் காரணங்களால், கடினமான உபாயத்தை உரைக்கும் சாஸ்த்ரங்களுக்கு, அவை ப்ரமாணமாக உள்ளன என்னும் தன்மை மறைந்துவிடும். “சுலபமான உபாயத்தைக் கைக்கொள்வதில் ஆசையை உண்டாக்கும்விதமாக, கடினமான உபாயத்தை முதலில் விதித்த பின்னர் அவற்றைத் துறத்தல் குறித்துக் கூறப்படுகிறது” என்று கூறுவது மிகவும் பொருந்தாத கூற்றாகும். “உபாயங்களாக அல்லாதவற்றை உபாயங்களாகக் கூறிய பின்னர், அவற்றைத் துறத்தல் குறித்துக் கூறப்படுகிறது” என்று கூறினால், ச்ருதிகளும் ஸ்ம்ருதிகளும் மோக்ஷ உபாயங்களாக இல்லாதவற்றைக் கூறுகின்றன என்னும் தோஷம் ஏற்படும்; இதனால அவை மூலம் அறியப்படுவதான ஸர்வேச்வரனுடைய ஸ்வரூபம் குறித்து உறுதியாக அறிய இயலாத நிலை உண்டாகிவிடும். இந்த உலகில் பொருள் சேர்ப்பதில் ஆசை உள்ளவர்களில் சிலர் விவசாயம் செய்தல் போன்ற கடினமான செயல்களையும், சிலர் ரத்னங்களை விற்பது போன்ற சுலபமான செயல்களையும் செய்கிறார்கள் அல்லவோ (இதே போன்று மோக்ஷ உபாயங்களிலும் இருந்தால் என்ன) என்று சிலர் கேட்கலாம்; ஆனால் இந்த வேறுபாடுகளின் காரணம் அந்தந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களில் வேறுபாடு உள்ளதால் ஆகும். ஸ்வாமி கூரத்தாழ்வானின் சரமச்லோகத்திற்கான வ்யாக்யானத்திலும் நாம் கூறிய கருத்தே உள்ளதால், எந்தவிதமான முரண்பாடும் இல்லை. ஸமாவர்த்தனம் (ப்ரம்மசர்யத்தை முடித்துக் கொண்டு க்ருஹஸ்தனாக ஆகும்போதும் செய்யவேண்டிய ஸ்நானம் போன்றவை) போன்றவற்றில் கடினமானவையும் சுலபமானவையும் சூழ்நிலைக்குத் தக்கபடி விதிக்கப்பட்டுள்ளது என்று கொள்ளாவிட்டால், கடினமான உபாயத்தை விதிப்பது வீணாகும் (க்ருஹஸ்தனாக உடனேயே ஆகிறான் என்னும்போது சுலபமான ஸ்நானமும், சிறிது காலம் கழிந்த பின்னரே க்ருஹஸ்தனாகிறான் என்னும்போது கடினமான ஸ்நானமும் விதிக்கப்பட்டுள்ளது).