Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 13)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
“பரித்யஜ்ய” என்பதன் பொருள்
மூலம் – “பரித்யஜ்ய” என்கிறது விதியானபோது, ப்ரபத்யத்யாயாதிகளில் விதிக்கிறபடியே ஆகிஞ்சந்ய ப்ரதிஸந்தாநாதி ரூபமான கார்பண்யமாகிற ப்ரபத்யங்கத்தை விதிக்கிறதென்றால், அர்த்தத்தில் விரோதமில்லை. அப்போது “ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய” என்கிறவிது, “அஹம் அஸ்மி அபராதாநாம் ஆலயே: அகிஞ்சந: அகதி:”, “ந தர்ம நிஷ்டே அஸ்மி” இத்யாதிகளிற்படியே, ஸர்வதர்மங்களும் தன்னை யோக்யதா பர்யந்தமாகக் கழித்தபடியை முன்னிட்டுக் கொண்டு என்றபடி. இவ்வளவு விளம்பித ப்ரதீதிகமான அர்த்தமும், பஹு ப்ரமாண அநுகுணமாகையால் அவற்றுக்கு விருத்தமாக சங்கராத்யுக்தங்களான ஸர்வதர்ம ஸ்வரூப த்யாகார்த்தங்களிற் காட்டிலும் உபாதேயம்.
– “பரித்யஜ்ய” என்பது “இன்னதைச் செய்யவேண்டும்” என்று விதிக்கப்படும் பொருளில் உள்ளது என்று கொண்டால், ப்ரபத்தி அத்யாயம் போன்றவற்றில் விதிக்கப்படுவது போன்று, “என்னிடம் எந்தவிதமான கைம்முதலும் இல்லை” என்று எண்ணும் வடிவத்தில் உள்ளதான கார்பண்யத்தை (வேறு கதி அற்றவன் என்னும் நிலை) விதிப்பதாகக் கூறுவதில் குற்றம் இல்லை. இவ்விதம் கொண்டால் “ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய” என்பது, அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை (37-30) - அஹம் அஸ்மி அபராதாநாம் ஆலயே: அகிஞ்சந: அகதி: - நான் அபராதங்களின் இருப்பிடமாக உள்ளேன், என்னைக் காப்பாற்றிக் கொள்ளும் சக்தி அற்றவனாக உள்ளேன், உன்னை அடையும் வழி அறியாதவனாக உள்ளேன் – என்றும், ஸ்தோத்ரரத்னம் (22) – ந தர்ம நிஷ்டே அஸ்மி – தர்மத்தில் நிலைநிற்காமல் உள்ளேன் – என்றும் கூறுவதற்கு ஏற்ப, “அனைத்து தர்மங்களையும் கைக்கொள்ளத் தகுதி அற்றவனாக உள்ள நிலை” என்பதை உணர்த்துவதாக உள்ளது. இந்தப் பொருளானது ஒருவனுக்கு தாமதமாகவே அறியப்படுவதால், அந்தத் தாமதம் என்னும் தோஷம் கொண்டதாகவே உள்ளது; ஆனாலும், இவ்விதம் பொருள் கொள்ளுதல் என்பது பல ப்ரமாணங்களுக்கு ஏற்றபடியாகவே உள்ளதால், இதற்கு முரணாகப் பொருள் உரைத்த சங்கரர் முதலானவர்களுடைய கூற்றாகிய “அனைத்து தர்மங்களையும் அவற்றின் ஸ்வரூபத்துடன் கைவிடுதல்” என்பதைக் காட்டிலும் சிறந்ததே ஆகும்.