Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 12)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

“பரித்யஜ்ய” என்பதன் பொருள்

மூலம் – இவ் அநுவாதத்துக்கு அதிகார விசேஷத்தைக் காட்டுகை ப்ரயோஜநம். அதில் “பரி” என்கிற உபஸர்க்கம் அதிகார பௌஷ்கல்யத்தை விவக்ஷிக்கிறது. “அநித்யம் அஸுகம் லோகம் இமம் ப்ராப்ய பஜஸ்வ மாம்” என்கிறவிடத்தில் “ப்ராப்ய” என்கிறது விதியன்றிக்கே “ப்ராப்ய வர்த்தமாந: த்வம்” என்று வ்யாக்யாதமானாற்போலே இங்கும், “பரித்யஜ்ய ஸ்தித: த்வம்” என்று விவக்ஷிதமாகக் கடவது. இப்படி அர்த்தாந்தரங்களிலும் ப்ரயோகமுண்டாகையாலே “க்த்வா” ச்ருதி மாத்ரத்தைக் கொண்டு, த்யாகம் அங்கமென்னவொண்ணாது.

– “ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய” என்பது அநுவாதம் ஆகும் (அநுவாதம் என்றால் முன்பே நடந்ததை உரைப்பதாகும். இது விதிமுறையைக் கூறுவது அல்ல. அதாவது மற்ற அனைத்து உபாயங்களையும் கைக்கொள்ள இயலாமல், அதனைக் கைவிட்டுள்ள நிலையில் ஸர்வேச்வரனையே உபாயமாகக் கைக்கொள்ளுதலே இங்கு கூறப்படுகிறது). இது ப்ரபத்தியைக் கைக்கொள்ளும் தகுதி கொண்ட அதிகாரியைக் கூறுகிறது. “பரி” என்பது அத்தகைய தகுதியின் முழுமையைக் கூறுகிறது. கீதை (9-33) - அநித்யம் அஸுகம் லோகம் இமம் ப்ராப்ய பஜஸ்வ மாம் – நிலையற்றதும் ஆனந்தம் அற்றதும் ஆகிய இந்த லோகத்தை அடைந்த நீ என்னைப் பக்தியுடன் பணிவாயாக – என்னும் ச்லோகத்தில் உள்ள “ப்ராப்ய = அடைந்த” என்பது விதிமுறையைக் கூறும் தொனியில் வரவில்லை; மாறாக “ப்ராப்ய வர்த்தமாந: த்வம் – இந்த உலகத்தை அடைந்துள்ள நீ” என்னும் தொனியில் வந்துள்ளது. இதே போன்று இங்கும் “பரித்யஜ்ய ஸ்தித: த்வம் – அனைத்து வழிகளையும் கைவிட்டுள்ள நீ” என்று கொள்ளவேண்டும். ஆகவே இவ்விதம் நம்மால் பெறப்படும் அர்த்தங்களில் வேறுபாடு உள்ளதால், “க்த்வா – செய்ததன் பின்னர்” என்று உள்ளதைக் கொண்டு “அனைத்தையும் கைவிடுதல்” என்பது ப்ரபத்தியின் அங்கம் என்று கூற இயலாது.