Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 11)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

“பரித்யஜ்ய” என்பதன் பொருள்

மூலம் – “பரித்யஜ்ய” என்கிறவிடத்தில் த்யாகமாவது “அநயா ச ப்ரபத்யா மாம் ஆகிஞ்சந்யைக பூர்வகம்” இத்யாதிகளிற்படியே அகிஞ்சநனான தன் நிலையைக் கண்டு உபாயாந்தரங்களிற் பிறந்த நைராச்யம். ஆசையாலே பற்றானால் ஆசையை விடுகை த்யாகமென்ன உசிதமிறே. அதில் “பரி” என்கிற உபஸர்கத்தாலே, “அநாகத அநந்த கால ஸமீக்ஷயா அபி அத்ருஷ்ட ஸந்தார உபாய:”, “த்வத் பாத கமலாத் அந்யத் ந மே ஜந்மாந்தரேஷ்வபி” இத்யாதிகளிற்படியே அத்யந்த அகிஞ்சநனுக்கு ஸர்வ காலத்திலும் ஸர்வ ப்ரகாரத்தாலும் யோக்யதையில்லாமை தெளிகையாலே பிறந்த நைராச்ய அதிசயம் சொல்லப்படுகிறது. ஸர்வ ப்ரகாரத்தாலும் த்யாகமாவது, பூர்ண அநுஷ்டாந சக்தியில்லாதபோது யதாசக்தி அநுஷ்டாநம் பண்ணுகிறோமென்றும், அதுக்கு யோக்யதையில்லாத தசையிலே வேறே சில அநுகல்பங்களையாதல் உபாய உபாயங்களையாதல் அநுஷ்டிக்கிறோமென்றும் தனக்கு துஷ்கரங்களைக் கணிசிக்கும் துராசையற்றிருக்கை.

– (“பரித்யஜ்ய” என்றால் “முழுமையாக விடுதல்” என்று பொருள்) இங்கு “விடுதல்” என்பது அநயா ச ப்ரபத்யா மாம் ஆகிஞ்சந்யைக பூர்வகம் – இந்த ப்ரபத்தி மூலம் “மற்ற உபாயம் ஏதும் இல்லாமை” என்பதை மட்டுமே முன்னிட்டுக் கொண்ட என்னை – போன்றவற்றில் கூறப்படுவது போன்று, மற்ற உபாயங்களைக் கைக்கொள்ள இயலாமல் உள்ள தனது நிலையைக் கண்ட ஒருவன், அத்தகைய மற்ற உபாயங்களின் மீது ஆசையின்றிப் போவதைக் குறிக்கும். ஒன்றை ஆசை காரணமாகப் பற்றினால், அந்த ஆசையை விடுதலே த்யாகம் என்று கூறுவது பொருத்தமே ஆகும். “பரித்யஜ்ய” என்பதில் உள்ள “பரி” என்னும் உபஸர்க்கம் மூலம், ஸ்ரீரங்ககத்யம் (2) - அநாகத அநந்த கால ஸமீக்ஷயா அபி அத்ருஷ்ட ஸந்தார உபாய: - இனி வரப்போகின்ற எல்லையற்ற காலத்தை நோக்கியபோதிலும் ஸம்ஸாரத்தைக் கடப்பதற்கான உபாயம் இன்றி உள்ளேன் – என்றும், ஜிதந்தே ஸ்தோத்ரம் (1-10) - த்வத் பாத கமலாத் அந்யத் ந மே ஜந்மாந்தரேஷ்வபி – உன்னுடைய தாமரை போன்ற திருவடிகள் அல்லாமல் எனக்கு எந்த ஜன்மத்திலும் வேறு புகலிடம் இல்லை – என்றும் கூறுவதற்கு ஏற்ப மற்ற எந்தவிதமான உபாயமும் இல்லாமல் உள்ளவனுக்கு, அனைத்து காலத்திலும் அனைத்து விதங்களிலும் தன்னிடம் வேறு உபாயங்களைக் கைக்கொள்ளத் தகுதி இல்லை என்று தோன்றுவதால் உண்டாகும் ஆசையற்ற தன்மையின் மிகுதியானது கூறப்படுகிறது. அனைத்துவிதங்களிலும் த்யாகம் என்பது என்ன? மோக்ஷத்திற்கு உபாயமாக உள்ள பக்தியோகத்தை முழுமையாகக் கைக்கொள்ள இயலாதபோது நம்முடைய சக்திக்கும் தகுதிக்கும் ஏற்றவரை அனுஷ்டிப்போம் என்றும், அதற்கும் சக்தி இல்லையெனில் அதற்கு மாறாக உள்ள அவை போன்ற மற்றவற்றையோ அல்லது உபாயத்திற்கு உபாயமாக உள்ளவற்றையோ அனுஷ்டிப்போம் என்றும் எண்ணியபடி, தன்னால் கைக்கொள்ள இயலாதவற்றிலிருந்து ஆசையை முழுவதுமாக விலக்கிக் கொள்ளும் நிலையாகும்.