Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 10)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
“ஸர்வதர்மாந்” என்பதன் விளக்கம்
மூலம் – புருஷோத்தமத்வ ஞானம் ஸர்வவித்யைகளுக்கும் உபகாரமான தத்வ ஞானமாத்ரமாகவும், அவதார ரஹஸ்ய சிந்தநம் அநுஷ்டிக்கிற உபாஸநாதிகளுடைய சீக்ர நிஷ்பத்தி ஹேதுவாகவும், தேசவாஸாதிகள் உபாயவிரோதி பாப க்ஷய ஹேதுக்களாய்க் கொண்டு உபாய நிஷ்பாதகங்களாவும் ஸ்ரீகீதாபாஷ்யாதிகளிலே ஸமர்த்திக்கையாலே, இவற்றை ஸாக்ஷாந்மோக்ஷோபாயங்களாக்கி அங்கி பஹுத்வ விஷயமான பஹு வசநத்தாலே விவக்ஷிக்கிறதென்கை உசிதமன்று. “நாநா சப்தாதி பேதாத்” என்கிறபடியே, இவையொழியவும் ஸத்வித்யா தஹரவித்யாதி பேதத்தாலே, அங்கி பஹுத்வம் கிடைக்கையால் இப்பஹு வசநம் ஸார்த்தம். அங்கி பஹுத்வத்தையும் பரிகர பஹுத்வத்தையுங்கூட விவக்ஷித்தாலும் விரோதமில்லை.
– புருஷோத்தமனைக் குறித்த ஞானம் (புருஷோத்தம வித்யை – கீதை அத்யாயம் 11) என்பதே அனைத்து வித்யைகளுக்கும் உதவியாக உள்ள தத்வஞானத்தை அளிக்கவல்லது என்றும், அவனுடைய அவதாரத்தைக் குறித்து அறிதல் என்பது உபாஸனைகளுடைய பலனான அவனை விரைவாக அளிப்பதற்குக் காரணம் என்றும், இத்தகைய உபாஸனைகளுக்குத் தடையாக உள்ள பாபங்களை போக்கவல்ல காரணங்களாக திவ்யதேசங்களில் வசித்தல் முதலானவை உள்ளதால் உபாஸனைக்கு அவை ஏதுவாக உள்ளன என்றும் கீதாபாஷ்யம் முதலானவற்றில் அருளிச்செய்யப்பட்டது. இவற்றை மோக்ஷத்திற்கான நேரடியான காரணங்கள் என்று கொண்டு, இவற்றையும் தர்மங்கள் என்று பன்மையில் கூறப்பட்ட தர்மங்களில் அடங்கும் என்று உரைக்க இயலாது (காரணம் இவை உபாஸனை போன்று மோக்ஷத்திற்கான நேரடியான உபாயங்கள் அல்ல). ப்ரஹ்மஸூத்ரம் (3-3-56) - நாநா சப்தாதி பேதாத் – பெயர்கள் வெவ்வேறாக உள்ளதால் ப்ரஹ்மவித்யைகளும் வேறுபட்டவை ஆகும் – என்பதற்கு ஏற்ப, ஸத்வித்யை, தஹரவித்யை என்று பலவிதமான வித்யைகள் உள்ளதால், “தர்மாந்” என்று பன்மையில் கூறப்பட்டது என்று கருத்து. ஆக அங்கிகளும் (உபாஸனைகள்), அதன் அங்கங்களும் பலவாக உள்ளதால், “தர்மாந்” என்று பன்மையில் கூறப்பட்டது என உரைத்தாலும் தவறில்லை.