Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 9)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

“ஸர்வதர்மாந்” என்பதன் விளக்கம்

மூலம் – தர்மமாவது சாஸ்த்ரமே கொண்டு அறியவேண்டியிருக்கும் புருஷார்த்த ஸாதநம். “தர்மாந்” என்கிற பஹுவசநத்தாலே அபிமத ஸாதநமாக சாஸ்த்ர சோதிதங்களான தர்மங்களுடைய பஹுல்யத்தைச் சொல்லுகிறது. “ஸர்வ” சப்தத்தாலே ஸபரிகரமான நிலையை விவக்ஷிக்கிறது. தர்மபரிகரங்களையும் தர்மமென்று சொல்லக் குறையில்லையிறே. இஸ் ஸர்வசப்தத்தை ஏகசப்த ப்ரதிஸம்பந்தியாக யோஜிக்கும்போது, இது அங்கிகளான நாநாதர்மங்களினுடைய கார்த்ஸ்ந்யத்தைச் சொல்லுகிறது. இப்படி பொதுவிலே சொன்னாலும் இங்குப் ப்ரகரண வசத்தாலே, மோக்ஷார்த்தமாக சாஸ்த்ர விஹிதங்களாய் ஸபரிகரங்களாய் நாநாப்ரகாரங்களான உபாஸனங்களையெல்லாம் சொல்லுகையிலே தாத்பர்யம்.

– “தர்மம்” என்னும் சொல்லானது, சாஸ்த்ரங்கள் (வேதங்கள்) மூலமாக மட்டுமே அறியப்படக்கூடிய உயர்ந்த பலனைத் தருகின்ற உபாயத்தைக் குறிக்கும். “தர்மாந்” என்று பன்மையில் கூறுவதன் மூலம், விரும்புகின்ற பலனை அளிப்பதற்கு ஏற்ற உபாயமாகச் சாஸ்த்ரங்களில் பல தர்மங்கள் விதிக்கப்பட்டுள்ளன என்பது உணர்த்தப்படுகிறது. “ஸர்வ” என்னும் சொல்லானது, அந்த தர்மங்கள் அனைத்தும் அவற்றின் அங்கங்களுடன் கூடியுள்ளதைக் குறிக்கும். தர்மங்களுக்கு அங்கங்களாக உள்ளவற்றையும் தர்மங்கள் என்று கூறுவதில் தவறில்லை அல்லவோ? “மாம் ஏக” என்பதில் உள்ள “ஏக = ஒன்று” என்னும் சொல்லுக்கு எதிர்மறையாக “ஸர்வ” என்பதை வைத்து நோக்கும்போது, இது அங்கிகளாக உள்ள பலவிதமான தர்மங்களுடைய முழுமையைக் குறிக்கும். “தர்ம” என்னும் சொல் பொதுவான தர்மங்களைக் கூறுவது போன்று இருந்தாலும், இந்த இடத்தில், மோக்ஷத்திற்கான உபாயங்களாக சாஸ்த்ரங்கள் கூறுவனவற்றை வெளிப்படுத்துவதாகவே உள்ளது; அதாவது அதற்கு அங்கங்களாக உள்ள பலவிதமான உபாஸனைகள் கூறப்படுகின்றன.