Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 6)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

சரமச்லோகத்தின் அவதாரிகை

மூலம் – இப்பரமபுருஷார்த்தத்தைக் கடுகப் பெறவேணுமென்கிற த்வரை உண்டேயாகிலும், ஸபரிகரமான இவ் வுபாயத்தினுடைய துஷ்கரதையினாலும், இவ் வுபாயாநுஷ்டானத்துக்கு அபேக்ஷித ஞான சக்திகளுண்டேயாகிலும், அநேகாவதாநத்தோடே கூடச் சிரகால ஸாத்யமான உபாய ஸ்வபாவத்தாலே அபிமதம் கடுகத் தலைக்கட்டாதபடியிருக்கையாலும் நிரதிசய சோகாவிஷ்டனான அர்ஜுனனை வ்யாஜமாகக் கொண்டு பரமகாருணிகனான கீதோபநிஷதாசார்யன், “பக்த்யா பரமயாவாபி ப்ரபத்த்யா வா மஹாமதே ப்ராப்யோஹம் நாந்யதா ப்ராப்யோ மம கைங்கர்ய லிப்ஸுபி:” என்று தான் விகல்பித்து விதித்த உபாயங்களில், “தாவதார்த்திஸ் ததா வாஞ்சா தாவந்மோஹஸ் ததா அஸுகம்” என்கிறபடியே தன் திருவடிகளைப் பெறுகைக்கும் மற்றும் அபிமதமானவை எல்லாவற்றுக்கும் பொதுவான ஸாதநமாய், ஆநுகூல்ய ஸங்கல்பாதி வ்யதிரிக்த பரிகர நிரபேக்ஷமாய், லகுதரமாய், க்ஷணமாத்ர ஸாத்யமான ரஹஸ்யதமோபாயத்தை ச்ரோதவ்ய சேஷமில்லாதபடி, உபதேச பர்யவஸானமான சரமச்லோகத்தால் ஸகல லோக ரக்ஷார்த்தமாக அருளிச் செய்கிறான்.

– இப்படிப்பட்ட உயர்ந்த புருஷார்த்தமாகிய மோக்ஷத்தை விரைவாகப் பெறவேண்டும் என்னும் வேகம் அர்ஜுனனிடம் இருந்தபோதிலும், பல அங்கங்களுடன் கூடியதான இந்தப் பக்தியோகத்தை எளிதாக இயற்றமுடியாத காரணத்தாலும், இந்த உபாயத்தைக் (பக்தியோகம்) கைக்கொள்ளத் தேவையான ஞானம் மற்றும் சக்தி போன்றவை அவசியம் என்பதாலும், பலவிதமான கவனத்துடன் இந்த உபாயத்தைக் கைக்கொண்டாலும் தனது விருப்பம் என்பதான மோக்ஷம் விரைவாகக் கிட்டாது என்பதாலும், அர்ஜுனன் மேலும் சோகம் அடைந்தான். இப்படிப்பட்ட அர்ஜுனனை ஒரு காரணமாக வைத்துக் கொண்டு, மிகுந்த கருணையுள்ள கீதாசார்யனாகிய க்ருஷ்ணன் செய்தது என்னவென்றால் - பக்த்யா பரமயாவாபி ப்ரபத்த்யா வா மஹாமதே ப்ராப்யோஹம் நாந்யதா ப்ராப்யோ மம கைங்கர்ய லிப்ஸுபி: - சிறந்த மதி நிறைந்தவனே! எனக்குக் கைங்கர்யம் செய்தல் வேண்டும் என்று எண்ணுபவர்களால் பக்தி அல்லது ப்ரபத்தியால் மட்டுமே நான் அடையப்படுகிறேன்; மற்ற வழிகளால் அடைய இயலாது – என்பதற்கு ஏற்ப தான் விதித்த உபாயங்களுக்குள், விஷ்ணுபுராணம் (1-9-73) - தாவதார்த்திஸ்ததா வாஞ்சா தாவந்மோஹஸ்ததா அஸுகம் யாவந்ந யாதி சரணம் த்வாமசேஷாதநாசநம் – அனைத்து பாவங்களையும் நீக்கவல்ல ப்ரபத்தியை உன்னிடம் பண்ணாமல் உள்ளவரை மட்டுமே மனிதனுக்குத் தான் இழந்த செல்வங்களை மீண்டும் பெறவேண்டும், புதிய செல்வம் அடையவேண்டும், சரீரத்தைக் காட்டிலும் வேறுபட்ட ஆத்மாவை உணராமல் இருப்பது, ஸம்ஸார துக்கம் ஆகியவை தொடரும் – என்பதற்கு ஏற்ப தன்னுடைய திருவடிகளை அடைவதற்கும், மேலும் விரும்பப்படும் அனைத்திற்கும் பொதுவானதாகவும் உள்ள ஸாதனமாகவும்; அவனுக்கு விருப்பமானவற்றைச் செய்தல் மற்றும் விருப்பம் அல்லாதவற்றைத் தவிர்த்தல் என்னும் இரண்டு அங்கங்களை மட்டுமே அவசியமாகக் கொண்டதாகவும்; மிகவும் எளிதாகவும்; கேட்ட நொடிப்பொழுதில் தகுந்த உபாயமாக உள்ளதும்; மிகவும் இரகசியமாக உள்ளதும் – ஆகிய உபாயத்தை, இதற்கும் மேல் கேட்பதற்கு ஒன்றும் இல்லை என்று கூறலாம்படியாக உள்ள, உபதேசத்தில் முடிவதான சரமச்லோகம் மூலம் அனைத்து உலகங்களையும் காப்பாற்றும் பொருட்டு அருளிச் செய்தான்.