Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 5)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

சரமச்லோகத்தின் அவதாரிகை

மூலம் – இவ்வர்ஜுநன், தன்னை நிமித்தமாத்ரமாகக் கொண்டு ஸர்வேச்வரன் தன் ப்ரதிபக்ஷங்களை நிரஸிக்க நின்ற நிலையைக் கண்டு பந்துவிநாசம் ஸித்தமென்று நிச்சயித்து, அஸ்தாந ஸ்நேஹத்தாலே பிறந்த சோகத்தாலும், அஸ்தாந க்ருபையாலும், ஆசார்யாதிகள் யுத்தோந்முகரேயாகிலும் அவர்கள் வதத்தாலே பாபம் வருகிறதென்கிற பயத்தாலும் கலங்கி, எது ஹிதமென்று தெளியவேண்டுமென்று பார்த்து, “யச்ச்ரேய: ஸ்யாந்நிச்சிதம் ப்ரூஹி தந்மே சிஷ்யஸ்தே அஹம் சாதி மாம் த்வாம் ப்ரபந்நம்” என்று விண்ணப்பம் செய்ய; அவனுடைய சோகத்தை நிவர்த்திப்பிக்கைக்காக தேஹாதி வ்யதிரிக்தமாய்ப் பரசேஷதைகரஸமான நித்யாத்ம ஸ்வரூபத்தையும், இஸ்ஸ்வரூபம் தெளிந்தவனுக்குப் பரமபுருஷார்த்த லாபத்துக்குப் பரம்பரயா காரணங்களான கர்மயோக ஞானயோகங்களையும், ஸாக்ஷாதுபாயமாகச் சோதிதமான பக்தியோகத்தையும் ஸபரிகரமாக உபதேசிக்க,

– தன்னை ஒரு பெயரளவில் மட்டுமே யுத்தபூமியில் நிறுத்திவிட்டு, ஸர்வேச்வரன் தன்னுடைய எதிர்தரப்பினர் அனைவரையும் அழிப்பதற்காக நின்றதை அர்ஜுனன் கண்டான். இதனால் தனது உறவினர்கள் அனைவரும் மடிவது உறுதி என்று முடிவு செய்தான். ஆகவே, வரக்கூடாத இடத்தில் (அதாவது யுத்தபூமியில்) தகாதவர்கள் குறித்து உண்டான சோகம் காரணமாகவும், அவசியம் இல்லாத கருணை காரணமாகவும், யுத்தத்தில் தனக்கு முன்பாக தனது ஆசார்யர்கள் உள்ளதால் அவர்களைக் கொன்ற பாபம் உண்டாகும் என்னும் பயம் காரணமாகவும் கலங்கினான். தனக்கு எது நன்மை என்று அறிய எண்ணினான். ஆகவே கீதையில் (2-7) - யச்ச்ரேய: ஸ்யாந்நிச்சிதம் ப்ரூஹி தந்மே சிஷ்யஸ்தே அஹம் சாதி மாம் த்வாம் ப்ரபந்நம் – உன்னுடைய சிஷ்யனாக உன்னிடம் சரணம் அடைந்த எனக்கு எது நன்மை என்று உனக்குத் தோன்றுகிறதோ, அதனை உபதேசிப்பாயாக – என்று கூறுவதற்கு ஏற்ப விண்ணப்பித்தான். அவனுடைய சோகத்தை விலக்குவதற்காக, சரீரத்தைக் காட்டிலும் வேறுபட்டதும் ஸர்வேச்வரனுக்கு கைங்கர்யம் செய்தலை மட்டுமே தனக்கு இன்பமாகக் கொண்டதும் நித்யமாக உள்ளதும் ஆகிய ஆத்மஸ்வரூபத்தைக் குறித்தும், இப்படிப்பட்ட ஆத்மஸ்வரூபம் குறித்து அறிந்த ஒருவன் உயர்ந்த புருஷார்த்தமாகிய மோக்ஷம் பெறுவதற்கான காரணமாக உள்ள கர்மயோகம் – ஞானயோகம் ஆகியவை குறித்தும், நேரடியான காரணமாக உள்ள பக்தியோகத்தைக் குறித்தும், அவற்றின் அங்கங்களுடன் உபதேசித்தபோது …