Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 4)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
சரமச்லோகத்தின் அவதாரிகை
மூலம் – ஏஷ நாராயண: ஸ்ரீமாந் க்ஷீரார்ணவ நிகேதந: நாகபர்யந்தம் உத்ஸ்ருஜ்ய ஹி ஆகதோ மதுராம் புரீம் என்கிறபடியே ஸ்ரீய:பதியான ஸர்வேச்வரன், ஸாதுபரித்ராண துஷ்க்ருத் விநாச தர்ம ஸம்ஸ்தாநங்களுக்காக “வண்டுவராபதி மன்னனாய்” வந்து அவதரித்தருளி ஸர்வஸுலபனாய், “த்ரௌபத்யா ஸஹிதா: ஸர்வே நமச்சக்ருர்ஜநார்த்தநம்” என்கிறபடியே சரணாகதரான பாண்டவர்களுக்கு “இன்னார் தூதனென நின்று” அர்ஜுநனை ரதியாக்கித் தான் ஸாரதியாய் அவனுக்கு விதேயனாய் நின்றவளவிலே,
– ஹரிவம்சம் (113-62) - ஏஷ நாராயண: ஸ்ரீமாந் க்ஷீரார்ணவ நிகேதந: நாகபர்யந்தம் உத்ஸ்ருஜ்ய ஹி ஆகதோ மதுராம் புரீம் – மஹாலக்ஷ்மியின் நாதனாகிய ஸ்ரீமந்நாராயணன், திருப்பாற்கடலில் உள்ள ஆதிசேஷன் என்னும் தனது படுக்கையை விட்டு, மதுராவில் வந்து தோன்றினான் – என்பதற்கு ஏற்ப, மஹாலக்ஷ்மியின் நாதனாகிய ஸர்வேச்வரன், நல்லவர்களைக் காப்பாற்றவும் – தீயவற்றை அழிக்கவும் – தர்ம மார்க்கத்தை நிலைநாட்டவும், திருவாய்மொழி (5-3-6) – வண்துவராபதி மன்னன் – என்பதற்கு ஏற்ப பெரியதான த்வாரகையின் சக்ரவர்த்தியாக அவதரித்து எல்லாருக்கும் எளிதாக நாடலாம்படி விளங்கினான்; மஹாபாரதம் வனபர்வம் (161-36) - ஏவமுக்தாஸ்த்ரய: பார்த்தா யமௌ ச பரதர்ஷப த்ரௌபத்யா ஸஹிதா: ஸர்வே நமச்சக்ருர்ஜநார்த்தநம் – மார்க்கண்டேயரால் உபதேசிக்கப்பட்ட குந்தியின் புத்திரர்கள் மூவரும் நகுல ஸஹாதேவர்களுடனும், திரௌபதியுடனும் சேர்ந்து க்ருஷ்ணனைச் சரணம் அடைந்தார்கள் – என்பதற்கு ஏற்ப தன்னைச் சரணம் அடைந்த பாண்டவர்களுக்காக, பெரியதிருமொழி (2-2-3) – இன்னார் தூதனென நின்றான் – என்பதற்கு ஏற்ப தூது சென்று, அர்ஜுனனைத் தேரில் அமர வைத்து தான் அவனுக்குச் சாரதியாக அவன் கூறுவதற்கு ஏற்ப நடந்தபடி இருந்தபோது …