Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 3)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

ஒண்டொடியாள் திருமகளும் தானுமாகி ஒரு நினைவால் ஈன்ற உயிரெல்லாம் உய்ய வண் துவரைநகர் வாழ வசுதேவற்காய் மன்னவற்குத் தேர்ப்பாகனாகி நின்ற தண்டுளவமலர் மார்பன் தானே சொன்ன தனித்தருமம் தானெமக்காய்த் தன்னை என்றும் கண்டு களித்து அடிசூட விலக்காய் நின்ற கண்புதையல் விளையாட்டைக் கழிக்கின்றானே

– அழகான த்வாரகையில் உள்ள அனைவரும் நலமாக இருக்கும்விதமாக, வஸுதேவனுக்குப் புத்திரனாக அவதரித்தவனும், அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக நின்றவனும், குளிர்ந்த துளசியுடன் சேர்ந்த மலர்களைத் தனது திருமார்பில் அணிந்தவனும் ஆகிய க்ருஷ்ணன், அழகான வளையல்கள் அணிந்த பெரியபிராட்டியும் தானுமாகச் சேர்ந்து, இந்த உலகத்தைக் கரையேற்றுவதற்காக ஒரே போன்று சிந்தித்தனர். ஆகவே, தானே சரமச்லோகத்தில் தன்னையே அடையக்கூடிய தர்மமாக (ஸித்தோபாயமாக) வெளிப்படுத்திக் கொண்டான். இதன் மூலமாக, அவனை எப்போதும் அனுபவித்தபடி நின்று, அவனுக்குக் கைங்கர்யம் செய்யக்கூடிய வாய்ப்பிற்குத் தடையாக உள்ளதான ப்ரக்ருதியுடனான தொடர்பு என்னும் கண்கட்டி விளையாட்டை நீக்குகிறான்.