Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 75)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்
த்வயத்தின் மூலம் கிட்டும் திரண்ட பொருள்
மூலம் – வைராக்ய விஜித ஸ்வாந்தை: ப்ரபத்தி விஜிதேச்வரை: அநுக்ரோசைக விஜிதை: இத்யுபாதேசி தேசிகை: இதமஷ்டபதம் வ்யாஸே ஸமாஸே ஷட்பதம் விது: வாக்யம் பஞ்சபதைர் யுக்தம் இத்யாக்யாத ப்ரதாநகம் ஏகம் த்வயம் த்ரய வயம் ஸுக லப்ய துர்யம் வ்யக்த அர்த்தபஞ்சகம் உபாத்த ஷடங்க யோகம் ஸப்தார்ணவீ மஹிமவத் விவ்ருத அஷ்டவர்ண ரங்கே ஸதாமிஹ ரஸம் நவமம் ப்ரஸூதே ஓதுமிரண்டை இசைத்து அருளால் உதவும் திருமால் பாதமிரண்டும் சரணெனப் பற்றி நம் பங்கயத்தாள் நாதனை நண்ணி நலந்திகழ் நாட்டில் அடிமையெல்லாம் கோதிலுணர்த்தியுடன் கொள்ளுமாறு குறித்தனமே ந வேதாந்தாத் சாஸ்த்ரம் ந மதுமதநாத் தத்த்வம் அதிகம் ந தத்பக்தாத் தீர்த்தம் ந தத் அபிமதாத் ஸாத்த்விக பதம் ந ஸத்த்வாத் ஆரோக்யம் ந புதபஜநாத் போதஜநகம் ந முக்தே: ஸௌக்யம் ந த்வய வசநத: க்ஷேமகரணம்
– வைராக்ய விஜித ஸ்வாந்தை: ப்ரபத்தி விஜிதேச்வரை: அநுக்ரோசைக விஜிதை: இத்யுபாதேசி தேசிகை: - தங்களுடைய வைராக்யம் மூலம் தங்களுடைய மனத்தை வசப்படுத்தியவர்களும், ப்ரபத்தி மூலம் ஸர்வேச்வரனை வசப்படுத்தியவர்களும், இரக்கத்தால் மட்டுமே வெல்லப்பட்டவர்களும் ஆகிய ஆசார்யர்களால் இவ்விதம் உபதேசிக்கப்பட்டது. இதம் அஷ்டபதம் வ்யாஸே ஸமாஸே ஷட்பதம் விது: வாக்யம் பஞ்சபதைர் யுக்தம் இத்யாக்யாத ப்ரதாநகம் – த்வயமானது பிரிக்கப்பட்டால் (ஸ்ரீமந் நாராயண சரணௌ – என மூன்று சொற்களாகப் பிரிக்கப்பட்டால்) எட்டு சொற்களைக் கொண்டதாகவும், பிரிக்கப்படாமல் சேர்ந்தே இருந்தால் (ஸ்ரீமந் நாராயண சரணௌ – என்பது ஒரே சொல்லாகக் கொள்ளப்பட்டால்) ஐந்து சொற்களைக் கொண்டதாகவும் (ஸ்ரீமந் நாராயண சரணௌ, சரணம், ப்ரபத்யே, ஸ்ரீமதே நாராயணாய, நம:), “ப்ரபத்யே” என்னும் வினைச்சொல்லை முதன்மையாகக் கொண்டதாகவும் (ப்ரபத்யே, சரணம், ஸ்ரீமந் நாராயண சரணௌ, ஸ்ரீமதே நாராயணாய, நம:) உள்ள வாக்கியமாகும் என்று கொண்டனர். ஏகம் த்வயம் த்ரய வயம் ஸுக லப்ய துர்யம் வ்யக்த அர்த்தபஞ்சகம் உபாத்த ஷடங்க யோகம் ஸப்தார்ணவீ மஹிமவத் விவ்ருத அஷ்டவர்ண ரங்கே ஸதாமிஹ ரஸம் நவமம் ப்ரஸூதே – த்வயம் என்னும் பெயர் கொண்ட இந்த ஒரே வாக்கியமானது மூன்று உட்பகுதி வாக்கியங்களைக் கொண்டதாகவும், நான்காவதான மோக்ஷத்தை அளிப்பதாகவும், அர்த்தபஞ்சகம் என்னும் ஐந்து விஷயங்களை தெரிவிப்பதாகவும், ஆறு அங்கங்களுடன் கூடிய ப்ரபத்தி யோகத்தை அளிப்பதாகவும், ஏழு ஸமுத்திரங்கள் போன்று மேன்மை கொண்டதாகவும், எட்டு எழுத்துள்ள திருமந்த்ரத்தை விளக்குவதாகவும், ஸம்ஸார மண்டலத்தில் உள்ளதான ஸ்ரீரங்கத்தில் வசிப்பவர்களுக்கு சாந்தி என்னும் ஒன்பதாவது ரஸத்தை அளிப்பதாகவும் உள்ளது. ஓதுமிரண்டை இசைத்து அருளால் உதவும் திருமால் பாதமிரண்டும் சரணெனப் பற்றி நம் பங்கயத்தாள் நாதனை நண்ணி நலந்திகழ் நாட்டில் அடிமையெல்லாம் கோதிலுணர்த்தியுடன் கொள்ளுமாறு குறித்தனமே – வேதங்களில் அத்யயனம் செய்யப்படுவதான இரண்டு வாக்கியங்களை ஒன்றாகச் சேர்த்து தன்னுடைய க்ருபையால் “த்வயம்” என்று அளித்து உபகாரம் செய்த ஸர்வேச்வரனுடைய இரண்டு திருவடிகளை மட்டுமே நமக்கு உபாயமாகப் பற்றியபடி, தாமரைமலரில் வசிப்பவளான நம்முடைய பெரியபிராட்டியின் நாயகனை அண்டி நின்று, ஆனந்தம் நிலைப்பதான பரமபதத்தில், அனைத்துவிதமான கைங்கர்யங்களையும் (நாம் செய்கிறோம், அதன் பலனை நாம் அனுபவிக்கிறோம் என்று எண்ணுகின்ற) தோஷம் இல்லாதவிதத்தில் கைக்கொள்ளும் வழியை நாம் த்வயத்தில் கூறினோம் ந வேதாந்தாத் சாஸ்த்ரம் ந மதுமதநாத் தத்த்வம் அதிகம் ந தத்பக்தாத் தீர்த்தம் ந தத் அபிமதாத் ஸாத்த்விக பதம் ந ஸத்த்வாத் ஆரோக்யம் ந புதபஜநாத் போதஜநகம் ந முக்தே: ஸௌக்யம் ந த்வய வசநத: க்ஷேமகரணம் – வேதாந்தங்களைக் காட்டிலும் உயர்ந்த சாஸ்த்ரம் இல்லை, மது என்னும் அஸுரனை அழித்த க்ருஷ்ணனைக் காட்டிலும் உயர்ந்த தத்துவம் இல்லை, பாகவதர்களைக் காட்டிலும் தூய்மையாக்கவல்ல பொருள்கள் இல்லை, பாகவதர்கள் விருப்பத்துடன் வாழும் இடங்களைக் காட்டிலும் ஸத்வகுணம் நிறைந்த இடங்கள் இல்லை, ஸத்வகுணத்தைக் காட்டிலும் ஆரோக்யம் அளிக்கவல்ல பொருள்கள் இல்லை, சிறந்த ஆசார்யனை அடைவதைக் காட்டிலும் மெய்ஜ்ஞானம் அளிப்பது வேறு இல்லை, மோக்ஷத்தைக் காட்டிலும் ஸுகம் அளிப்பது வேறு இல்லை, த்வயத்தை எண்ணியபடி இருத்தலைப் போன்று க்ஷேமம் அளிப்பது வேறு இல்லை.