Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 74)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்
த்வயத்தின் மூலம் கிட்டும் திரண்ட பொருள்
மூலம் – இங்கு பூர்வகண்டமும், சதுர்த்யந்த பதங்களும், நமஸ்ஸுமாக மூன்று அவாந்தர வாக்யங்களானாலும், திரள உபாயப்ரதாநமான ஒரு வாக்யமாய்த் தலைக்கட்டக் கடவது. எங்ஙனேயென்னில், ஸர்வஸ்வாமியாய் ஸர்வப்ரகார நிரதிசய போக்யனாய்ப் பெரியபிராட்டியாரோடு பிரிவில்லாத நாராயணன் திருவடிகளில் ஸ்வரூப ப்ராப்தமான ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தோசித ஸர்வவித கைங்கர்யத்துக்கும் விரோதியான ஸர்வமும் கழிந்து பரிபூர்ண கைங்கர்யம் பெறுகைக்கு அகிஞ்சனனான அடியேன் ஸ்வரக்ஷணபராதிகளில் எனக்கு அந்வயமறும்படி ஸ்ரீமானான நாராயணன் திருவடிகளிலே அங்கபஞ்சக ஸம்பந்நமான ஆத்மரக்ஷா பரஸமர்ப்பணம் பண்ணுகிறேனென்று த்வயத்தில் திரண்ட பொருள்.
– த்வயத்தில் உள்ள முதல் வரி, நான்காம் வேற்றுமையான “ஆய” என்பதில் முடியும் சொற்கள், “நம:” என்று உள்ளவற்றைத் தனித்தனியே கொண்டு, த்வயத்தில் மூன்று இடைப்பட்ட வாக்கியங்கள் உள்ளன என்றாலும் (முதல் வாக்கியம் – ஸ்ரீமந்நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே – பெரியபிராட்டியுடன் கூடிய ஸ்ரீமந்நாராயணன் திருவடிகளில் சரணம் அடைகிறேன்; இரண்டாவது வாக்கியம் – ஸ்ரீமதே நாராயணான ஸ்யாம் – பெரியபிராட்டியுடன் கூடிய நாராயணனுடைய திருவடிகளில் பரிபூர்ணமான கைங்கர்யத்தை அடைவேனாக; மூன்றாம் வாக்கியம் – நம: - கைங்கர்யத்துக்கு எந்தவிதமான தடையும் உண்டாகக்கூடாது), உபாயத்தைக் கருத்தில் கொண்டு, அதனை ஒரே வாக்கியமாகவே கொள்ளவேண்டும். இது எப்படி? அனைவருக்கும் எஜமானனாகவும், எல்லையற்ற இனிமை நிறைந்தவனாகவும், பெரியபிராட்டியை விட்டு அகலாதவனாகவும் உள்ள ஸ்ரீமந்நாராயணனுடைய திருவடிகளில்; என்னுடைய ஆத்மஸ்வரூபத்திற்குச் சேர்வதான, அனைத்து இடங்களிலும் அனைத்து காலங்களிலும் அனைத்து நிலைகளிலும் அனைத்துவிதங்களிலும் செய்யப்படும் கைங்கர்யத்துக்கு; தடையாக உள்ள அனைத்துவிதமான இடையூறுகளும் நீங்கி, பரிபூர்ணமான கைங்கர்யத்தில் ஈடுபடுவதற்கு; மற்ற எந்தவிதமான உபாயங்களிலும் சக்தியில்லாத நான் – என்னைக் காப்பாற்றும் பொறுப்பிலும், அதன் பலனிலும் சற்றும் ஸம்பந்தம் கொள்ளாதபடி, பெரியபிராட்டியார் என்னும் செல்வம் கொண்ட ஸ்ரீமந்நாராயணனுடைய திருவடிகளில் ஐந்து அங்கங்களுடன் கூடியதான, “என்னுடைய ஆத்மாவை ரக்ஷித்து, அதனைக் காக்கும் பாரத்தை அவனிடம் சமர்ப்பிக்கிறேன்” என்பதான ப்ரபத்தியைச் செய்கிறேன் – என்பதே த்வயத்தின் மூலம் வெளிப்படும் விரிவான பொருளாகும்.