Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 73)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்

கைக்கொள்ளும் நேரத்தில் த்வயத்தின் அர்த்தங்களை எண்ணும் விதம்

மூலம் – இப்படி சாரீரக சாஸ்த்ரத்திற்போலவே தத்த்வவிசேஷமும் உபாயவிசேஷமும் பலவிசேஷமும் இம்மந்த்ரத்திலே ப்ரதிபாதிதமானாலும், இது ச்வேதாஸ்வதர மந்த்ரம் போலே பலாபேக்ஷாபூர்வகமான உபாயாநுஷ்டான ப்ரதானமாகையால், உபாய பலங்களுடைய உத்பத்தி க்ரமத்தோடே சேர்ந்த பாட க்ரமத்தாலே பல ப்ரதிபாதக வாக்யம் பிற்பட்டாலும், அர்த்த க்ரமத்தாலே இது முற்பட அநுஸந்தேயமென்று பூர்வர்கள் அருளிச் செய்வர்கள். புருஷன் புருஷார்த்தத்தை விமர்சித்துக் கொண்டன்றி, உபாயவிமர்சமும் உபாயாநுஷ்டாநமும் பண்ணானிறே. இப்படித் திருமந்த்ரத்திலும் உபாய பல ப்ரதிபாதகம்சங்களில் க்ரம ப்ரகாரங்களைக் கண்டு கொள்வது. பலார்த்தியாய் அதிகாரியானாலிறே இவனுக்கு இவ்வுபாயாநுஷ்டாநம் வருவது? “த்வயேந சரணம் வ்ரஜேத்”, “த்வயார்த்த: சரணாகதி:” என்கிற அபியுக்தர் பாசுரங்களாலும் த்வயம் உபாயாநுஷ்டாநத்தைப் ப்ரதானமாக ப்ரகாசிக்கிறது.

– ப்ரஹ்மஸூத்ரத்தில் உள்ளதைப் போன்றே த்வயத்திலும் பெரியபிராட்டியுடன் கூடிய ஸர்வேச்வரனுடைய மேன்மை, அவனை அடையும் உபாயத்தின் சிறப்பு (ப்ரபத்தியின் சிறப்பு), அந்த உபாயத்தின் மூலம் அடையும் பலனின் சிறப்பு (கைங்கர்யத்தின் சிறப்பு) ஆகியவை அதே வரிசையில் கூறப்படுகின்றன. ஆனால் இந்த த்வய மந்த்ரத்தில், ச்வேதாஸ்வதர உபநிஷத்தில் உள்ள மந்த்ரம் போன்று (மோக்ஷத்தை விரும்பி உன்னைச் சரணம் அடைகிறேன்), பலனை முதலில் கூறி அதனைத் தொடர்ந்து உபாயத்தைக் கூறவில்லையே என்று சிலர் கேட்கலாம். இதற்கான சமாதானத்தை – உபாயம் மற்றும் பலன் என்னும் வரிசையில் த்வய மந்த்ரம் உள்ளபோதிலும், இதனால் பலனைக் குறித்துக் கூறும் வாக்கியம் பின்னுக்குத் தள்ளப்பட்டபோதிலும், ப்ரபத்தியைக் கைக்கொள்ளும் நேரத்தில் முதலில் பலனையே(கைங்கர்யத்தையே) எண்ணுதல் வேண்டும் – என்று பூர்வார்சார்யர்கள் உரைப்பர். ஒரு உபாயத்தைக் குறித்து அறிந்து கொண்டு, அதனைக் கைக்கொள்ளும் எந்த ஒரு மனிதனும், அந்த உபாயத்தால் விளையக்கூடிய பலன் என்ன என்பதை அல்லவோ முதலில் ஆராய்வான்? அதன் பின்னரே அவன் உபாயத்தில் ஈடுபடுவான். இது போன்றே திருமந்த்ரத்திலும், உபாயம் மற்றும் பலனைக் கூறுதலில் உள்ள வரிசையைக் கொள்ளவேண்டும். ஒருவன் பலனை அடைவதில் விருப்பம் கொள்ளவேண்டும், மேலும் அதற்கான தகுதி அவனிடம் இருக்கவேண்டும், அதன் பின்னர் அல்லவோ அவன் அந்தப் பலனுக்கான உபாயத்தில் ஈடுபடுவான்? த்வயேந சரணம் வ்ரஜேத் – த்வயம் என்னும் மந்த்ரத்தால் சரணம் அடையவேண்டும் – என்றும், த்வயார்த்த: சரணாகதி: - த்வயத்தால் கூறப்படும் சரணாகதி – என்றும் உள்ள சான்றோர்கள் வாக்கின்படி, த்வயம் என்பது உபாயத்தைக் கைக்கொள்ளுதலையே முதன்மையாகக் கூறுகிறது.