Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 72)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்

த்வயத்தில் உள்ள சொற்களின் மூலம் கிடைக்கும் பொருளின் சுருக்கம்

மூலம் – இப்படி த்வயத்தில் பதங்களில் அடைவே சப்த அர்த்த ஸ்வபாவங்களாலே புருஷகாரயோகம், அதின் நித்யத்வம், உபாய வைசிஷ்டயம், சரண்யகுண பூர்ணத்வம், ஸம்பந்த விசேஷம், திவ்யமங்கள விக்ரஹயோகம், அதில் சேஷபூதன் இழியும் துறை, அதின் உபாயத்வ ப்ரகாரம், வசீகரண விசேஷம், தத்பரிகரங்கள், அதிகாரி விசேஷம், ப்ராப்ய வைசிஷ்டயம், குணவிபூதி விசிஷ்ட ப்ராப்யத்வம், கைங்கர்ய ப்ரதிஸம்பந்தித்வம், கைங்கர்ய ப்ரார்த்தனை, ஸர்வவிதி கைங்கர்ய லாபம், ஸர்வாநிஷ்ட நிவ்ருத்தி, அதினுடைய ஆத்யந்திகத்வம், பராதீந பரார்த்த கர்த்ருத்வம், ததாவித போக்த்ருத்வம் என்றிவை ப்ரதானமாய், இவற்றுக்கு அபேக்ஷிதங்களுமெல்லாம் ஸித்த ஸாத்ய விபாகவத்தான உபாயமென்றும் உபேயமென்றும் இரண்டு ப்ரதாந ப்ரதிபாத்யங்களோடே துவக்குண்டு ப்ரகாசிதங்களாயிற்று.

– த்வயத்தில் உள்ள பல சொற்களின் தன்மைகளாலும், அந்தச் சொற்களில் மறைமுகமாக வெளிப்படும் பொருளாலும் கீழே உள்ள பல அர்த்தங்கள் வெளிப்படுகின்றன – புருஷகாரமாக (சிபாரிசு) உள்ள பெரியபிராட்டியுடன் ஸர்வேச்வரனுக்கு உள்ள சேர்த்தி, இந்தச் சேர்த்தியின் எப்போதும் உள்ள தன்மை, ஸர்வேச்வரனுடன் சேர்ந்து பெரியபிராட்டியும் உபாயமாக உள்ள தன்மை, அடையப்படும் ஸர்வேச்வரன் அனைத்து குணங்களையும் பூர்ணமாகக் கொண்டுள்ள தன்மை, ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே உள்ள தொடர்பின் சிறப்பு (எஜமானன் – அடிமை, சரீரி – சரீரம் போன்றவை), ஸர்வேச்வரன் திவ்யமானதும் மங்களகரமானதும் ஆகிய திருமேனியைக் கொண்டிருத்தல், இப்படியாக உள்ள திருமேனியுடன் கூடிய ஸர்வேச்வரனை அடிமையான ஜீவாத்மா அண்டுதல், இத்தகைய திருமேனி ஜீவாத்மாவுக்கு உபாயமாக உள்ள விதம், ஸர்வேச்வரனுடைய க்ருபையைப் பெறும் விதம், அதன் அங்கங்கள், உபாயத்தைக் கைக்கொள்ள முயலும் அதிகாரியின் தன்மைகள், ஸ்ரீயுடன் கூடிய ஸர்வேச்வரன் அடையவேண்டிய இலக்காக உள்ளது எப்படி, அடையவேண்டிய இலக்காக உள்ள ஸர்வேச்வரன் குணங்களுடனும் விபூதிகளுடனும் உள்ளது எப்படி, ஸர்வேச்வரனும் பெரியபிராட்டியும் நம்முடைய கைங்கர்யங்களை ஏற்பவர்களாக உள்ளது எப்படி, இத்தகைய கைங்கர்யத்தைப் பெறுவதற்கான ப்ரார்த்தனை, அனைத்துவிதமான கைங்கர்யங்களையும் அடைதல், நமக்கு விருப்பம் அல்லாதவை அனைத்தும் நம்மை விட்டு விலகுதல், இவ்விதம் விலகிய அனைத்தும் மீண்டும் உண்டாகாமல் இருத்தல் (அல்லது அவை தொடக்கம் மற்றும் முடிவுடன் அழிதல்), ஸர்வேச்வரனுடைய விருப்பத்திற்கும் ஆணைக்கும் ஏற்ப ஜீவாத்மா செயலாற்றியபடி உள்ள நிலை, மோக்ஷம் பெற்ற பின்னரும் ஸர்வேச்வரனுடைய விருப்பத்திற்கும் ஆணைக்கும் ஏற்ப ஜீவாத்மா இன்பங்களை அனுபவித்தபடி உள்ள நிலை – போன்றவை ஆகும். இவை மட்டும் அல்லாமல் த்வயத்தின் மூலம் வெளிப்படும் மேலும் இரண்டு முக்கியமான விஷயங்கள் – ஸித்தமாகவும் (ஸர்வேச்வரன் மற்றும் பெரியபிராட்டி), ஸாத்யமாகவும் (ப்ரபத்தி) உள்ளதான உபாயம் மற்றும் ஸித்தமாகவும் (ஸர்வேச்வரன் மற்றும் பெரியபிராட்டி), ஸாத்யமாகவும் (கைங்கர்யம்) உள்ளதான இலக்கு – என்பவை ஆகும்.