Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 70)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்
“நம:” என்பதற்கு அருளாளப்பெருமாள் எம்பெருமானாருடைய விளக்கம்
மூலம் – “நம:” என்கிற இத்தாலே ஆத்ம ஆத்மநீயங்களோடும் ஸ்வரக்ஷண தத்பலங்களோடும் தனக்குத் துவக்கற்றமை காட்டுகிறது. பரஸம்பந்த விதியிலும் ஸ்வஸம்பந்த நிஷேதத்திலும் தாத்பர்யமாகையாலே இச்சதுர்த்தீ, நமஸ்ஸுக்கள் இரண்டுக்கும் பலமுண்டு. இஸ்ஸமர்ப்பணந்தன்னிலும் பரநிரபேக்ஷ கர்த்ருத்வாதிகளை நிஷேதிக்கைக்காக “நம:” என்கிறதாகவுமாம்.
– “நம:” என்பதன் மூலம் ஒருவனுக்கு அவனுடைய ஆத்மாவுடனான ஸம்பந்தம் நீங்குவதும், அவனுக்கும் அவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் எண்ணதிற்கும் உள்ள ஸம்பந்தம் நீங்குவதும், அதன் மூலம் கிட்டும் பலனுக்கும் அவனுக்கும் உள்ள ஸம்பந்தம் நீங்குவதும் உணர்த்தப்படுகிறது. “நாராயணாய” என்பதில் உள்ள நான்காம் வேற்றுமையான “ஆய” என்பதும், “நம:” என்பதும் முறையே பகவானுடனான ஸம்பந்தம் உள்ளதையும், நம்முடைய ஆத்மாவுடன் நமக்குச் ஸம்பந்தம் இல்லாததையும் (அதாவது நமது சரீரத்துடன் ஆத்மாவுக்குப் பிடிப்பு இல்லாமை அல்லது நம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் செயலுடன் நமக்கு ஸம்பந்தம் இல்லாமை) உணர்த்துகின்றன. இப்படியாக உள்ள ஸமர்ப்பணத்தை உணர்த்துவது மட்டும் அல்லாமல், ஸர்வேச்வரனுக்கு விருப்பம் அல்லாத செயல்களைச் செய்யாமல் இருப்பதையும் உணர்த்தவே “நம:” எனப்படுகிறது என்றும் கூறலாம்.