Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 69)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்
“நம:” என்பதற்கு அருளாளப்பெருமாள் எம்பெருமானாருடைய விளக்கம்
மூலம் – “அஹமத்யேவ மயா ஸமர்ப்பித:” என்கிறபடியே இவ்விடத்தில் நான் ஸ்ரீமானான நாராயணனுக்கென்று ஸமர்ப்பிக்க “யத் ஸம்ரக்ஷ்யதயா அர்ப்பயதே”, “தவைவாஸ்மி ஹி பர:” இத்யாதிகளிற்படியே ஸ்வரக்ஷணபரமும், ஸ்வரக்ஷணபலமும் அவனதென்று இங்கே அபிப்ரேதமாகவுமாம்.
– ஸ்தோத்ரரத்னம் (52) - அஹமத்யேவ மயா ஸமர்ப்பித: - இப்படிப்பட்ட நான் என்னால் உனது திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்டேன் – என்னும் ச்லோகத்திற்கு ஏற்ப, “பெரியபிராட்டியாருடன் கூடிய நாராயணனுக்கு நான் சமர்ப்பணம் செய்யப்பட்டேன்” என்று கூறும்போது, தன்னைக் காப்பாற்றும் பொறுப்பு மற்றும் அவ்விதம் காப்பாற்றப்படுவதால் உண்டாகும் பலன் ஆகிய இரண்டும் நாராயணனுக்கே சேர்கின்றன என்பதை கீழே உள்ள ச்லோகங்களால் அறியலாம். அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை (52-35) - யத் ஸம்ரக்ஷ்யதயா அர்ப்பயதே – தன்னைக் காப்பாற்றும் பொறுப்பு யாரிடம் ஒப்படைக்கப்படுகிறது என்ற கேள்வி எழும்போது, விஷ்ணுவிடம் என்பது பதிலாகிறது ஸ்தோத்ரரத்னம் (60) - தவைவாஸ்மி ஹி பர: - உன்னால் காக்க வேண்டியவற்றில் நானும் ஒருவன்