Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 68)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்
“நம:” என்பதற்கு அருளாளப்பெருமாள் எம்பெருமானாருடைய விளக்கம்
மூலம் – பரமாத்மநி நாராயணாம் ஸர்வபார ஸமர்ப்பணாத் ஸம்ஜாதம் நைரபேக்ஷ்யம் து நம இத்யுச்யதே புதை: என்று இங்குற்ற நமஸ்ஸை அருளாளப்பெருமாள் எம்பெருமானார் வ்யாக்யானம் பண்ணினார். இந்த ச்லோகத்திற் சொன்ன நைரபேக்ஷ்யம் ஸ்வரக்ஷணத்தில் நிர்பரத்வம். இந்த நிர்பரத்வத்தாலே பரஸமர்ப்பணம் ஸூசிதமாதல், ஸ்வநிர்பரத்வ பர்யந்தமான பரஸமர்ப்பணம் இவ்விடத்திலே விவக்ஷிதமாதல் ஆகக்கடவது. ஹவி: ஸமர்ப்பணத்தில் “இதமிந்த்ராய ந மம” என்னுமாப்போலே “அஹம் ஸ்ரீமதே நாராயணாய” என்று இங்கு பரகர்பமாக ஸமர்ப்பித்து, “ந மம” என்று தன்னுடன் துவக்கறுக்கிறதென்றால், இஸ்ஸமர்ப்பண யோஜனைக்கு ஸ்வரஸம். இந்த யோஜனையில், பூர்வகண்டம் அங்க பஞ்சக பரம்; உத்தரகண்டம் அங்கி ப்ரதிபாதகம்.
– பரமாத்மநி நாராயணாம் ஸர்வபார ஸமர்ப்பணாத் ஸம்ஜாதம் நைரபேக்ஷ்யம் து நம இத்யுச்யதே புதை: - தன்னுடைய அனைத்து பாரங்களையும் பரமாத்மாவாகிய நாராயணனிடம் சமர்ப்பணம் செய்த காரணத்தால், (தன்னுடைய விஷயத்தில்) வேறு எதனையும் எதிர்பாராமல் உள்ள நிலையே “நம:” என்பதால் கூறப்படுவதாகச் சான்றோர்கள் உரைப்பர் – என்று “நம:” என்னும் சொல்லுக்கான பொருளை ஸ்வாமி அருளாளப்பெருமாள் எம்பெருமானார் வ்யாக்யானம் செய்தார். இந்த ச்லோகத்தில் உள்ள “நைரபேக்ஷ்யம்” என்னும் சொல்லானது, தன்னைக் காப்பாற்றிக் கொள்வதில் எந்தவிதமான பொறுப்பையும் எதிர்பாராமல் இருத்தல் என்பதாகும். இப்படியாக நம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் பொறுப்பிலிருந்து நாம் விலகிக் கொள்ளுதல் என்பதால் “நம்முடைய பாரங்களைச் சமர்ப்பித்தல்” கூறப்பட்டது என்றோ அல்லது நம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் பொறுப்பை நாம் கைவிடுதல் முடிய உள்ள “நம்முடைய பாரங்களைச் சமர்ப்பித்தல்” கூறப்பட்டது என்றோ கூறப்பட்டது எனலாம். யஜ்ஞத்தில் அவிர்பாகத்தை அளிக்கும்போது “இதம் இந்த்ராய ந மம – இது இந்த்ரனுக்காக, எனக்காக அல்ல” என்று கூறுவது போன்றே த்வய மந்த்ரத்திலும் “அஹம் ஸ்ரீமதே நாராயணாய – நான் ஸ்ரீமந்நாராயணனுக்காக” என்று சமர்ப்பணம் செய்து, “ந மம – நான் எனக்கு உரியவன் அல்லேன்” என்று தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் பொறுப்பை தான் கைவிடுதல் என்னும்போது, மேலே கூறப்பட்ட பரசமர்ப்பணம் குறித்த கருத்து மிகவும் பொருத்தமாகிறது. இவ்விதம் பொருள் கொள்ளும்போது, த்வயத்தில் உள்ள முதல் வரியானது ப்ரபத்திக்கான ஐந்து அங்கங்களையும் (ஆநுகூல்ய ஸங்கல்பம் – ஸர்வேச்வரனுக்கு ஏற்ற வகையில் நடக்க உறுதி செய்தல், ப்ராதிகூல்ய வர்ஜநம் – அவனுடைய திருவுள்ளத்திற்கு மாறாக நடக்காமல் இருத்தலை உறுதி செய்தல், மஹாவிச்வாஸம் – அவன் நிச்சயமாக மோக்ஷம் அளிப்பான் என்னும் நம்பிக்கை, கார்ப்பண்யம் – அவனுக்கு நம் மீது க்ருபை ஏற்படும்படி தாழ்ந்து நிற்றல், கோப்த்ருத்வ வரணம் – எந்த உபாயங்களையும் இயற்ற சக்தி இல்லாத தன்னை அந்த உபாயங்களின் இடத்தில் நின்று காக்குமாறு வேண்டுதல்), இரண்டாவது வரியானது அங்கியாக உள்ள ப்ரபத்தியையும் குறிக்கும்.