Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 67)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்

“நம:” என்பதன் பொருள்

மூலம் - இந் நம: சப்தத்தாலே அவித்யா கர்ம ததுபய வாஸநா ருசி ப்ரக்ருதி ஸம்பந்தாதி ரூபங்களான ஸர்வவிரோதிகளையும் கழியா நிற்கச் செய்தேயும், இதுக்கு நிர்வசநம் பண்ணுகிற ச்ருதியின்படியே பரிபூர்ண கைங்கர்ய ரூப பல தசையில் பலாந்தராநுபவ ந்யாயத்தாலே, சங்கிதமான ஸ்வாதீந ஸ்வார்த்த கர்த்ருத்வம் ஸ்வாதீந ஸ்வார்த்த போக்த்ருத்வமாகிற களைகளைக் கழிக்கையிலே இங்கு ப்ரதாந தாத்பர்யமென்று அநுஸந்திப்பார்கள். இத்தால், பலாந்தராநுபவ தசையிலுண்டாம் ஸ்வாதீந ஸ்வார்த்த கர்த்ருத்வ போக்த்ருத்வ ப்ரமங்கள், முக்த தசையில் கைங்கர்யத்தில் இல்லாதபடி கண்டு அக்கட்டளையிலே ப்ரார்த்திக்கிறானென்றதாயிற்று.

– இந்த உலகுடன் கொண்டுள்ள தொடர்பு காரணமாக, உலக விஷயங்கள் மீது உள்ள பூர்வ வாசனைகள், அவற்றின் மீது உள்ள ஆசைகள் போன்றவை காரணமாக அவித்யை (அறியாமை) மற்றும் கர்மங்கள் தொடர்ந்தபடி உள்ளன; “நம:” என்பதன் மூலம், இப்படிப்பட்ட அவித்யை மற்றும் கர்மங்கள் நீங்கவேண்டும் என்னும் ப்ரார்த்தனை செய்யப்படுகிறது என்றாலும், சில பூர்வாசார்யர்கள் கருதுவது என்னவென்றால் – மோக்ஷம் பெற்ற பின்னர் உண்டாகின்ற பகவத் கைங்கர்ய விஷயத்தில், “நான் செய்கிறேன், இவற்றை நான் எனக்காகச் செய்கிறேன், நான் அனுபவிக்கிறேன், நான் எனக்காக மட்டுமே அனுபவிக்கிறேன்” என்பதான எண்ணங்கள் உண்டாகுமோ என்ற சந்தேகம் ஏற்படலாம்; ஆனால், “மற்ற பலன்களாக உள்ள செல்வம், ஸ்வர்க்கம் போன்றவற்றை அனுபவிக்கும்போது ஒருவனுக்கு உண்டாகின்ற ‘நான் தக்க உபாயங்களைச் செய்து இவற்றை அனுபவிக்கிறேன்’ போன்ற எண்ணங்கள், மோக்ஷம் என்னும் பலனை அனுபவிக்கும்போது ஏற்படாது” என்பதான பலாந்தர அனுபவ ந்யாயம் போன்று, இந்த தோஷங்கள் மோக்ஷ நிலையில் பகவத் கைங்கர்ய விஷயத்தில் உண்டாகாமல் கழிப்பதே “நம:” என்பதன் முக்கியமான ப்ரார்த்தனை – என்பதாகும். ஆகவே இந்த உலகில் உள்ள செல்வம் முதலானவற்றை அனுபவிக்கும்போது உண்டாகின்ற “விஷயத்தில், “நான் செய்கிறேன், இவற்றை நான் எனக்காகச் செய்கிறேன், நான் அனுபவிக்கிறேன், நான் எனக்காக மட்டுமே அனுபவிக்கிறேன்” என்பதான மயக்கங்கள், மோக்ஷ நிலையில் உண்டாகின்ற பகவத் கைங்கர்யத்தின்போது இல்லாதைக் கண்டு, அது போன்றே விண்ணப்பிக்கிறான் என்றாயிற்று.