Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 65)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்
“ஆய” என்னும் நான்காம் வேற்றுமை உருபின் பொருள்
மூலம் – இங்கு சதுர்த்தீ தாதர்த்ய முகத்தாலே கைங்கர்யத்தைக் கணிசிக்கிறது. தாதர்த்யம் மாத்ரம் நித்யமாகையாலே, “தச்சேஷத்வா நுஸந்தாநபூர்வ தச்சேஷ வ்ருத்திக:”, “அஹம் ஸர்வம் கரிஷ்யாமி” இத்யாதிகளிற்படியே இங்கு பரிபூர்ணாநுபவ பூர்வகமான கைங்கர்யம் ப்ரார்த்தநீயம். சரணாகதனாம்போது சரண்யனை அபிமத ப்ரார்த்தனை பண்ணுகிறானாகையாலே இங்கே “பவேயம்” என்று ஒரு பதம் அத்யாஹார்யம். இப்படிப் ப்ராதாந்யத்தாலே முற்பட இஷ்ட ப்ராப்தியை அபேக்ஷித்து இதுக்காக அநந்தரம் நமஸ்ஸாலே ஸர்வாநிஷ்ட நிவ்ருத்தியையும் ப்ரார்த்திக்கிறது. அப்ராப்தித: பரிஹரந் ஸ்வபரை: ஸ்வரக்ஷாம் தாதர்த்யதீ பரிஹ்ருத ஸ்வபரார்த்தபாவ: அந்யோபபோக விரஹாதநக: ப்ரபந்நோ புங்க்தே ஸ்வபோகமகிலம் பதிபோக சேஷம்
– “நாராயணாய” என்பதில் உள்ள “ஆய” என்னும் நான்காம் வேற்றுமையானது, சேதநன் ஸர்வேச்வரனுக்குக் கைங்கர்யம் செய்தபடி இருத்தலை (அல்லது அடிமையாக இருத்தலை) உணர்த்துவதாகும். ஆனால், இத்தகைய அடிமைத்தனம் என்பது சேதநனுக்கு எப்போதும் உள்ளதால், அதனைப் ப்ரார்த்திக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே, பராசர பட்டரின் நித்யத்தில் - தச்சேஷத்வா நுஸந்தாநபூர்வ தச்சேஷ வ்ருத்திக: - அவனுக்கு மட்டுமே அடிமை என்று எண்ணியபடி, அவனுக்கு ஏற்ற கைங்கர்யங்களைச் செய்வேன் – என்றும், இராமாயணம் (2-31-29) – அஹம் ஸர்வம் கரிஷ்யாமி – அனைத்து கைங்கர்யங்களையும் செய்வேன் – என்றும் கூறுவதற்கு ஏற்ப அடிமைத்தனம் மூலம் வரக்கூடிய பரிபூர்ணமான பகவத் அனுபவத்தை முன்னிட்டு உண்டாவதான கைங்கர்யமே இங்கு விண்ணப்பிக்கப்படுகிறது. சரணாகதி செய்யும்போது சரணம் அடைகின்ற சேதநன் ஒருவன், சரணம் அடையத்தக்க பகவானிடம் தன்னுடைய விருப்பத்தை ப்ரார்த்திப்பதால், இங்கு “பவேயம் = நான் ஆவேனாக” என்னும் வினைமுற்றை வரவழைத்துக் கொள்ளவேண்டும் (அதாவது – ஸ்ரீமதே நாராயணாய பவேயம் = நான் நாராயணனுக்காக ஆவேனாக). ஆக முதலில் நமக்கு விருப்பமான “ஸர்வேச்வரனுக்குக் கைங்கர்யம் செய்தல்” என்பது ப்ரார்த்திக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து “நம:” என்பதன் மூலம் நமக்கு விருப்பம் அல்லாதவை அனைத்தும் நீங்குதல் என்பது ப்ரார்த்திக்கப்படுகிறது. மேலே உள்ள ச்லோகத்தின் பொருள் – ப்ரபந்நன் ஒருவன் தன்னைக் காப்பாற்றுதல் என்னும் செயல் தனக்கும் மற்றவர்களுக்கும் உரிமை இல்லாத செயல் என்பதால் அவற்றை நீக்கிக் கொண்டவனாகவும், தான் “ஸர்வேச்வரனுக்கு மட்டுமே வசப்பட்டவன்” என்னும் எண்ணம் காரணமாக தான் தனக்கும் மற்றவர்களுக்கும் அடிமை என்னும் எண்ணத்தை நீக்கிக் கொண்டவனாகவும், மற்ற எதனைக் குறித்தும் எண்ணாமல் உள்ளதால் எந்தவிதமான தோஷமும் இல்லாதவனாகவும், தனக்கு வரக்கூடிய இன்பங்கள் அனைத்தும் ஸர்வேச்வரனுடைய இன்பத்துக்கு அடங்கியதாக எண்ணிபடியும் அனுபவிக்கிறான் – என்பதாகும்.