Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 60)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்

த்வயத்தின் பிற்பகுதியின் விளக்கம்

மூலம் – இப்படித் தோற்றின சரணாகதி, “தாவதார்த்திஸ்ததா வாஞ்சா தாவந்மோஹஸ்ததா அஸுகம்” இத்யாதிகளிற்படியே ஸகல பல ஸாதநமாகையாலும், “ததந்ய: கோ மஹோதார:” என்கிறபடியே பரமோதாரனான சரண்யன் அர்த்திதார்த்த பரிதாந தீக்ஷிதனாய் “கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல்லாம் தரும்” என்னும்படி நிற்கையாலும், இங்கு என்ன பலத்துக்காகப் ப்ரபத்தி பண்ணுகிறதென்கிற அபேக்ஷையிலே மஹோதாரனான சரண்யனுக்கும், ஸர்வோத்க்ருஷ்ட விஷயமான இவ்வசீகரண விசேஷத்துக்கும், சேஷதைகரஸனான தன் ஸ்வரூபத்துக்கும் அநுரூபமான பலவிசேஷத்தை உதரகண்டம் “தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே” என்கிறபடியே ஸமஸ்த விரோதி நிவ்ருத்தி பர்யந்தமாகப் ப்ரார்த்திக்கிறது. இத்தாலே அநந்ய ப்ரயோஜநத்வமும் ஸித்திக்கிறது.

– இப்படியாக (த்வயத்தின் முதல் பகுதியில்) கூறப்பட்ட சரணாகதி, ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-9-73) - தாவதார்த்திஸ்ததா வாஞ்சா தாவந்மோஹஸ்ததா அஸுகம் – எதுவரை அனைத்து பாபங்களையும் விலக்கவல்ல உன்னிடம் ப்ரபத்தி செய்யவில்லையோ, அதுவரை மட்டுமே ஒருவனுக்குத் தான் இழந்த செல்வத்தை மீண்டும் அடையவேண்டும் என்பதான கவலை (நீடிக்கும்) – போன்ற வரிகளில் கூறப்பட்டபடி, அனைத்துவிதமான பயனையும் அளிக்கவல்லதாகும். மேலும், இதிஹாஸ ஸமுச்சயம் (31-114) - ததந்ய: கோ மஹோதார: - தாரளமாக அளிப்பதில் அவனைத் தவிர வேறு யார் உள்ளனர் – என்று கூறப்படும் வாக்கியங்களுக்கு ஏற்ப, பெருங்கொடையாளனாக அனைத்து உயிர்களும் சரணம் புகுவதற்கு ஏற்றபடி உள்ள ஸர்வேச்வரன், தன்னிடம் கேட்டவற்றை அளித்தல் என்னும் உறுதியுடன், திருவாய்மொழி (3-9-5) - கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல்லாம் தரும் – அவனிடமிருந்து எதனைப் பெற்றாலும் அவனிடம் குறைவதில்லை, நாம் வேண்டிய அனைத்தையும் அளிப்பான் – என்று கூறுவதற்கு ஏற்றபடி உள்ளான். ஆக எந்தப் பலனை எதிர்பார்த்து ப்ரபத்தி செய்வது என்னும் கேள்வி எழுகிறது (இதற்கான விடை த்வயத்தின் இரண்டாம் பகுதியில் உள்ளது). இத்தகைய பலன் என்பது - அனைத்தையும் அளிக்கவல்ல கொடையாளனாகிய ஸர்வேச்வரனுக்கும், அனைவரிலும் மேம்பட்ட எம்பெருமானைக் குறித்துச் செய்யப்படும் ப்ரபத்திக்கும், அவனுக்குக் கைங்கர்யம் செய்தலையே தனக்கு இன்பமாகக் கொள்ளும் சேதநனுடைய ஸ்வரூபத்திற்கும் – ஏற்றதாக இருத்தல் வேண்டும். ஆக, திருவாய்மொழி (2-9-4) - தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே – என்பதற்கு ஏற்ப, அனைத்துவிதமான கைங்கர்யங்களையும் அளிக்கவேண்டும் என்பதும், அந்தக் கைங்கர்யங்களுக்குத் தடையாக வரக்கூடிய அனைத்தையும் நீக்கவேண்டும் என்பதுமே த்வயத்தின் இரண்டாம் பகுதியில் ப்ரார்த்திக்கப்படுகிறது. இதன் மூலம் மற்ற எதனிலும் இலக்கு வைத்தல் கூடாது என்பதும் வெளிப்படுகிறது.