Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 58)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்

“ப்ரபத்யே” என்பது நிகழ்கால வினையாகக் கூறப்படுதல்

மூலம் – இக் க்ரியா பதத்தில், வர்த்தமாந வ்யபதேசம் பர்ஹிர்வநாதி மந்த்ரங்களிற்போலே அநுஷ்டாந காலாபிப்ராயம். இங்ஙனன்றிக்கே இவ் வர்த்தமாந வ்யபதேசம் வர்த்தமாந தேஹாவதியாகப் ப்ரயத்த்யநுஷ்டாந கர்த்தவ்யதையை விவக்ஷிக்கிறதென்றும், பலம் வருமளவும் ப்ரபத்தி பரிகரமான விச்வாஸாநுவ்ருத்தியை விவக்ஷிக்கிறதென்றும், ப்ரபத்தி காலத்தில் தான் ஸங்கல்பித்தபடியே ஆநுகூல்யாதிகள் ப்ரபத்தி பரிகரமாகவே மேல் அநுவர்த்திக்க வேண்டும்படியைக் காட்டுகிறதென்றும் சொல்லும் பக்ஷங்கள், இவ்வுபாயம் ஸபரிகரமாக ஸக்ருத் கர்த்தவ்யமென்று காட்டுகிற ப்ரமாணங்களோடே விரோதிக்கும். த்வராதிசயத்தாலும் போகரூபதையாலும் வரும் ஆவ்ருத்திக்கும், பூர்வகண்டத்திற் சொன்னபடியே அநுஷ்டிதமான உபாய சரீரத்தில் ப்ரவேசமில்லை. ஆகையால் இவ்வுபாய வாக்யத்தில் வர்த்தமாந வ்யபதேசம், “த்வயமர்த்தாநு ஸந்தாநேந ஸஹ ஸதைவம் வக்தா” என்கிற ராகப்ராப்த போகரூபாநு வ்ருத்தியை விவக்ஷிக்கிறதுமன்று.

– “ப்ரபத்யே” என்னும் வினைச்சொல்லில் உள்ள நிகழ்கால வினையானது, யாகங்களில் தர்ப்பப்புல்லை அறுக்கும்போது கூறப்படுவதான ““பர்ஹிர்தேவஸதநம் தாமி” என்னும் மந்த்ரம் போன்று, அந்தச் செயலைச் செய்யும் காலத்தைக் குறிப்பதாகும் (அதாவது ப்ரபத்தியைச் செய்யும் நேரம்). “ப்ரபத்யே” என்பதில் உள்ள நிகழ்கால வினைக்கு இவ்விதம் பொருள் கொள்ளாமல் சிலர் : இந்தச் சரீரம் உள்ளவரை ப்ரபத்தியைக் கைக்கொள்ளவேண்டும் என்பதையே நிகழ்கால வினை குறிக்கிறது பலன் கிட்டும்வரை ப்ரபத்தியின் அங்கமான மஹாவிச்வாஸத்தைக் கைக்கொள்ளவேண்டும் என்பதையே நிகழ்கால வினை குறிக்கிறது ப்ரபத்தி நேரத்தில் ஸங்கல்பித்துக் கொண்ட ஆநுகூல்யம் போன்றவை, ப்ரபத்தியின் அங்கமாகத் தொடர்ந்தபடியே இருத்தல் வேண்டும் என்பதையே நிகழ்கால வினை குறிக்கிறது என்று இப்படியாகப் பலவிதமாகக் கூறுவர். ஆனால் இவை அனைத்தும், “ப்ரபத்தியானது அதன் அங்கங்களுடன் ஒரு பலனைக் குறித்து, ஒரேமுறை மட்டுமே கைக்கொள்ளபட வேண்டும்” என்பதைக் கூறுகின்ற ப்ரமாணங்களுடன் முரண்படுகின்றன. ப்ரபந்நன் ஒருவன் விரைவாகப் பலனை அடையவேண்டும் என்றும், அந்தப் பலனை அனுபவிக்கவேண்டும் என்றும் எண்ணி, இவ்விதம் ப்ரபத்தியைத் தொடர்ந்தபடி இருத்தல் என்பது, முன்பு கூறப்பட்டது போன்று உபாயமாகக் கைக்கொள்ளும் பிரிவில் சேராது. மேலும் இவ்விதமாக மற்ற பலனுக்காகச் (அதாவது மோக்ஷத்தை உடனே பெறவேண்டும் என்னும் பலன்) செய்வதாலும், எம்பெருமானார் கத்யத்தில் - த்வயமர்த்தாநு ஸந்தாநேந ஸஹ ஸதைவம் வக்தா – த்வயத்தை அதன் பொருளுடன் உணர்ந்து கூறியபடி – என்று கூறியபடியே எப்போதும் செய்தபடி உள்ள த்வய மந்த்ர சிந்தனை என்பது மற்ற பலனைக் கருதாமல் உள்ளதாலும், மோக்ஷத்திற்கு உபாயமாகக் கைக்கொள்ளபடும் ப்ரபத்தியில், இவர்கள் கூறும் ப்ரபத்தி சேராது.