Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம் (பத்தி 57)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 28.த்வயாதிகாரம்
த்வயத்தில் ஆநுகூல்ய ஸங்கல்பம் மற்றும் ப்ராதிகூல வர்ஜநம் ஆகியவற்றைக் கூறுதல்
மூலம் – சராசராணி பூதாநி ஸர்வாணி பகவத் வபு: அதஸ்ததாநுகூல்யம் மே கார்யமித்யேவ நிச்சய: ஸ்வஸ்ய ஸ்வாமிநி வ்ருத்திர்யா ப்ராதிகூல்யஸ்ய வர்ஜநம் இத்யாதி ப்ரமாணங்களின்படியே, ஸ்வாமித்வாதி நிபந்தநங்களைச் சொல்லுகிற ஸவிசேஷணமான நாராயண சப்தத்திலே, ஆநுகூல்ய ஸங்கல்பமும் ப்ராதிகூல்ய வர்ஜநமும் ஸூசிதமென்னுமிடம் முன்பே சொன்னோம். இப்பரிகரங்களும், உபாயார்த்தமாக ஸக்ருத் கர்த்தவ்யங்களென்னுமிடம் அதிகாராந்தரத்திலே சொன்னோம்.
– அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை (52-23) - சராசராணி பூதாநி ஸர்வாணி பகவத் வபு: அதஸ்ததாநுகூல்யம் மே கார்யமித்யேவ நிச்சய: - அசையும் மற்றும் அசையாத பொருள்கள் அனைத்தும் பகவானின் சரீரம் ஆகும்; ஆகவே அவைகளுக்கு நன்மையை மட்டுமே செய்தல் வேண்டும் – என்றும், அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை (52-21) - ஸ்வஸ்ய ஸ்வாமிநி வ்ருத்திர்யா ப்ராதிகூல்யஸ்ய வர்ஜநம் – தான் தன்னுடைய எஜமானனுக்கு விரோதமானவற்றைச் செய்யாமல் இருப்பது ப்ராதிகூல்ய வர்ஜநம் – என்றும் உள்ள ப்ரமாணங்களுக்கு ஏற்ப, அவனே எஜமானன் போன்றவற்றைக் கூறும் நாராயண என்னும் பதம் மூலம், அவனுக்கு ஏற்றவற்றைச் செய்தல் (ஆநுகூல்ய ஸங்கல்பம்), விருப்பம் அல்லாதவற்றைச் செய்யாமல் இருத்தல் (ப்ராதிகூல்ய வர்ஜநம்) ஆகிய இரண்டும் மறைமுகமாக உணர்த்தப்படுகிறது என்பதை முன்பே கூறினோம். ப்ரபத்தியின் இரண்டு அங்கங்களாக உள்ள இந்த இரண்டையும் உபாயமாக ஒருமுறை மட்டுமே எண்ணப்படவேண்டும் என்பதையும் பரிகரவிபாக அதிகாரத்தில் கூறினோம்.